கோவை:கோவை மாவட்டத்தில் பல இடங்களில் தென்னையில், கேரள வாடல் நோய், சிகப்பு கூன் வண்டு உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்கள் காணப்படுகிறது. நோய் பாதிப்பினால், தென்னை மரங்கள் பாதிக்கும் போது, உரிய இழப்பீடு பெறுவதற்காக, விவசாயிகள் முன்கூட்டியே காப்பீடு செய்ய வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு அதிக பட்சமாக, 175 மரங்களுக்கு காப்பீடு செய்யலாம். அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் முன்மொழிவு படிவத்தை பெற்று, தகவல்களை பூர்த்தி செய்து, பிரீமிய தொகையை வரைவோலையாக (டி.டி.,), சிட்டா, அடங்கலை இணைத்து வேளாண் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஓராண்டுக்கு இந்த காப்பீடு செல்லுபடியாகும்.
காப்பீடு துவங்கிய ஒரு மாத காலத்துக்குள் இழப்பீடு கேட்க முடியாது. நான்கு அல்லது ஏழு வயது முதல், 15 வயது வரையுள்ள ஒரு தென்னை மரத்துக்கு, 2.25 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும்; ஒரு மரத்துக்கு, 900 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். 16 முதல், 60 வயதுள்ள ஒரு மரத்துக்கு, 3.50 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்; 1,750 ரூபாய் இழப்பீடாக பெறலாம்.கேரள வாடல் நோய், பல்வேறு நோய், பூச்சி தாக்குதல்கள், வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் பாதித்தால், இழப்பீடு வழங்கப்படும். இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, வேளாண்துறை தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE