கவிழ்க்க துடிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்: ‛உள்குத்துக்கு தயாராகும் உடன் பிறப்புகள்!| Dinamalar

கவிழ்க்க துடிக்கும் 'ரத்தத்தின் ரத்தங்கள்': ‛உள்குத்து'க்கு தயாராகும் உடன் பிறப்புகள்!

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 11, 2021 | |
பொங்கல் விடு முறைக்கு வெளியூரில் இருந்து வரும் தோழியை வரவேற்க, சித்ராவும், மித்ராவும் காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் சென்றிருந்தனர்.வழியில் மக்கள் நீதி மைய போஸ்டர்கள் ஒட்டியிருந்ததை பார்த்த மித்ரா, ''அக்கா, நடிகர் கமல் பிரசாரத்துக்கு போயிருந்தீங்களே, எப்படி இருந்துச்சு,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அவரே, எதிர்பார்க்காத அளவுக்கு ஏகப்பட்ட கூட்டம்
 கவிழ்க்க துடிக்கும் 'ரத்தத்தின் ரத்தங்கள்': ‛உள்குத்து'க்கு தயாராகும் உடன் பிறப்புகள்!

பொங்கல் விடு முறைக்கு வெளியூரில் இருந்து வரும் தோழியை வரவேற்க, சித்ராவும், மித்ராவும் காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் சென்றிருந்தனர்.

வழியில் மக்கள் நீதி மைய போஸ்டர்கள் ஒட்டியிருந்ததை பார்த்த மித்ரா, ''அக்கா, நடிகர் கமல் பிரசாரத்துக்கு போயிருந்தீங்களே, எப்படி இருந்துச்சு,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''அவரே, எதிர்பார்க்காத அளவுக்கு ஏகப்பட்ட கூட்டம் கூடியிருந்துச்சு; பயண திட்ட அறிக்கையிலும், தெளிவு இல்லாமல் இருந்துச்சு. முதலில், தொண்டாமுத்துார் தொகுதி, மாதம்பட்டியில், மக்கள் மத்தியில் பேசுறதா குறிப்பிட்டிருந்தாங்க. பிரசாரத்துக்கு முந்தைய நாள், பட்டியலில் இருந்து மாதம்பட்டியை துாக்கிட்டாங்க. பிரசாரம் செய்ற தினம், மறுபடியும் சேர்த்துட்டாங்க,''

''குழப்பமான சூழல் இருந்துச்சு; இருந்தாலும், மாதம்பட்டியில் மட்டும் ரெண்டாயிரம் பேர், இரண்டு மணி நேரம் சிறுவாணி ரோட்டில் காத்திருந்தாங்க. அமைச்சர் வேலுமணி தொகுதிங்கிறதுனால, கூட்டம் சேராதுன்னு, குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்தாங்க. ஆயிரக்கணக்கில் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாம சிரமப்பட்டாங்க. கரன்சி கொடுத்து கூட்டத்துக்கு ஆள் திரட்டுற நேரத்துல, இவ்ளோ கூட்டம் கூடியதை பார்த்து, அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் மிரண்டு போயிருக்காங்க,''

''தொழில்துறையை சேர்ந்தவங்க, அதிருப்தியில் இருக்கறதா கேள்விப்பட்டேனே,''

''அதுவா, 'சான்றோர் சங்கமம்'ங்கிற தலைப்புல, 19 தொழில்துறை அமைப்பு நிர்வாகிகளை அழைத்து, கமல் உரையாடினாரு. ஏற்கனவே தேர்வு செய்திருந்த பிரமுகர்களுக்கே, பேசுறதுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. டென்ஷனான தொழில்அமைப்பு நிர்வாகி ஒருத்தரு, குறுக்கே புகுந்து, பேசியிருக்காரு. கம்யூ., இயக்கத்துடன் தொடர்புடைய சங்கத்தினர், எங்களை பேசுறதுக்கு அனுமதி கொடுக்கலை; கூட்டத்துக்கு கூப்பிட்டு, அவமானப்படுத்திட்டீங்கன்னு அதிருப்தியை பதிவு செஞ்சிருக்காங்க,''

''அடடே... அப்புறம் என்ன நடந்துச்சு,''

''அ.தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்திறங்கிய ஒரு குடும்பம், ஓட்டலுக்குள் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டுச்சு. 'ஸ்லீப்பர் செல்'லா, ரசிகரா, நண்பரான்னு தெரியலையேன்னு, கட்சிக்காரங்க புலம்பிட்டு இருந்தாங்க,''

''எல்லா இடத்திலும், ஒரே மாதிரிதான் பேசுறாராமே,''

''புது வாக்காளர்களான இளைஞர்களையும், பெண்கள் ஓட்டுகளையும் குறி வச்சு பேசுறாரு; 'சாதி பார்த்து ஓட்டுப்போடாதீங்க; சாதிக்கறவனை பார்த்து ஓட்டுப்போடுங்க; ராஜ விசுவாசம் காட்டும் மக்களுக்கு புரிய வைங்கன்னு, 'பஞ்ச்' பேசுனாரு,''

''லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இருந்த, அதே எழுச்சி மக்கள் மத்தியில் இருந்துச்சு; அதனால, ஓட்டு வங்கி சிதறிடுமோன்னு, திராவிடக் கட்சிக்காரங்க பயத்துல இருக்காங்க,''வெளியூரில் இருந்து வந்த தோழியை அழைத்துக் கொண்டு, அருகாமையில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தனர். எக் பிரைடு ரைஸ், பெப்பர் சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் ஆர்டர் கொடுத்தனர்.

''தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில, தி.மு. க.,விலும் கோஷ்டி பிரச்னை தலைதுாக்கி இருக்காமே; அதிருப்தியாளர்கள் ஒன்று திரண்டு, ரகசிய கூட்டம் நடத்துனதா, ஒரு வீடியோ வைரலாகிட்டு இருக்கே,''

''அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, குறிச்சி ஏரியாவுல வட்ட பொறுப்பாளர்கள் சிலரை புதுசா நியமிச்சிருக்காங்க. இதில், அதிருப்தியான பலரும், அந்த கூட்டத்துல கலந்துக்கிட்டு, மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதிக்கு எதிரா பேசியிருக்காங்க. ஆளுங்கட்சியிடம் கட்சியை அடமானம் வச்சிட்டதா குற்றம் சாட்டியிருக்காங்க. தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவருங்கிறதுனால, கட்சிக்குள்ள புகைச்சல் அதிகமாகிட்டு வருது,''உணவு பதார்த்தங்கள் டேபிளுக்கு வந்ததும், சாப்பிட ஆரம்பித்த மித்ரா, ''கிணத்துக்கடவு தொகுதியை கைப்பத்துறதுக்கு, உடன்பிறப்புகளுக்குள் ஏகப்பட்ட போட்டியாமே,'' என, கிளறினாள்

.''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். 'மாஜி' எம்.எல்.ஏ., பேரூர் நடராஜன் மகள், நெகமம் கந்தசாமி பேரன், மு.கண்ணப்பன் மகன் உள்ளிட்ட பலரும் 'சீட்' கேட்டு, கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்துட்டு இருக்காங்களாம்,''

''பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துல, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இருக்கறதுனால, ஈசியா ஜெயிச்சிடலாம்னு, உடன்பிறப்புகள் கணக்குப் போட்டுட்டு இருக்காங்க,''

''ஆளுங்கட்சி வி.ஐ. பி.,யும் ஆடிப்போயிருக்காராமே,'' என, 'பெப்பர் சிக்கன்' ருசித்தபடி, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமாப்பா, உளவுத்துறை மூலமா 'சர்வே ரிப்போர்ட்' கொடுத்திருக்காங்க; அத பார்த்துதான் ஆடிப்போயிட்டாராம். கட்சியில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுங்கியிருக்கும் பலரும், உள்குத்து வேலையில் ஈடுபட தயாரா இருக்காங்களாம். அவுங்களை, தங்களுக்கு சாதகமா பயன்படுத்த, தி.மு.க.,காரங்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா

.''அதெல்லாம் இருக்கட்டும். 'கொரோனா' பிரச்னைக்கு மத்தியில், கம்யூனிச சித்தாந்த புத்தகங்களை, ஸ்கூல்களுக்கு சப்ளை செஞ்சிருக்காங்களாமே,'' என, நோண்டினாள் மித்ரா.

''அதுவா, நம்மூர் எம்.பி., நடராஜன், தொகுதி மேம்பாட்டு நிதியில், 4 லட்சம் ரூபாயை, நுாலகங்களுக்கு கொடுத்திருக்காரு. நம்மூரிலேயே ஏகப்பட்ட பதிப்பகங்கள் இருக்கும்போது, கம்யூ., கட்சி சார்ந்த புத்தகாலயத்துக்கு, 'டெண்டர்' கொடுத்திருக்காங்க,''

''காமராஜர் பற்றிய புத்தகத்தை, ஒவ்வொரு நுாலகத்துக்கும் இலவசமா தர்றோம்னு உறுதி சொல்லியிருந்தாங்களாம்; இதுவரைக்கும் கொடுக்கலையாம். என்னென்ன தலைப்புல புக்ஸ் கொடுத்தாங்கன்னு கேட்டா, பள்ளி கல்வித்துறை தரப்புல பதில் சொல்றதுக்கு தயக்கம் காட்டுறாங்க,''

''மாணவர்கள் மத்தியில், கம்யூனிச விதையை துாவுற புத்தகங்களை திரும்ப பெறணும்; விஞ்ஞானம், அரசியல் சாராத புத்தகங்களை வழங்கணும்னு கோரிக்கை எழுந்திருக்கு,'' என்றாள் சித்ரா.

வழியில் தோழியிடம் சிறிது நேரம் பேசி, வழியனுப்பிய பின், ஸ்கூட்டரில் இருவரும் புறப்பட்டனர். சிக்னலில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை கவனித்த சித்ரா, ''மித்து, போலீஸ்காரருக்கு கொடுத்த 'மெமோ'வை திரும்பி வாங்கிட்டாங்களாமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, உண்மைதான்! கோவை தெற்கு பகுதி ஸ்டேஷன்ல டூட்டி பார்க்குற போலீஸ்காரர் மீது ஏகப்பட்ட புகார் வந்திருக்கு; விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுத்தாங்க. ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து, 'மெமோ'வையே திரும்ப வாங்க வச்சிட்டாங்களாம். கான்ஸ்டபிள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியலையேனு, போலீஸ் உயரதிகாரிகள் புலம்பிட்டு இருக்காங்க,''

''இதே மாதிரி, கோவை மத்திய பகுதியில் உள்ள ஸ்டேஷன் உளவுத்துறை போலீஸ்காரரும், தனக்கு வழங்கிய டிரான்ஸ்பர் ஆர்டரை 'கேன்சல்' செய்ய வச்சிருக்காரு; அந்தளவுக்கு உயரதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்குடன் வலம் வர்றாராம்,''

''இன்ஸ்பெக்டர் சிலரையும், மாத்தியிருக்காங்களே,''

''அக்கா, மூணு வருஷத்துக்கு மேலே, ஒரே இடத்துல வேலை பார்க்குறவங்களை, எலக்சன் நேரத்துல, வெவ்வேறு இடங்களுக்கு மாத்துறது வழக்கம். அதுல, சிக்காம இருக்க, பக்கத்து ஸ்டேஷனுக்கு 'டிரான்ஸ்பர்' வாங்குறாங்க. எலக்சன் முடிஞ்சதும், சில மாதங்கள் கழிச்சு, மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பி வந்திடுறாங்க,''

''நல்லா, சம்பாதிக்க பழகிட்டாங்க; இந்த ஊரை விட்டு கிளம்ப மனசு வராது, அப்படித்தானே,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X