சென்னை : பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பயனாளிகளுக்கு, தமிழக அரசு கூடுதலாக அறிவித்துள்ள, 70 ஆயிரம் ரூபாயை, நான்கு கட்டமாக பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு, 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இதில், மத்திய அரசின் பங்குத் தொகை, 72 ஆயிரம் ரூபாய்; மாநில அரசின் பங்குத் தொகை, 48 ஆயிரம் ரூபாய்.இத்தொகையுடன் கூடுதலாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில், 23 ஆயிரத்து, 40 ரூபாய்; தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிக்கு, 12 ஆயிரம் ரூபாய் என, ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.
கட்டுமான பொருட்கள் விலையேற்றம், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு போன்ற காரணங்களால், ஏற்கனவே மேற்கூரை அமைக்க தமிழக அரசால் வழங்கப்படும், 50 ஆயிரம் ரூபாய், 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த மாதம் முதல்வர் அறிவித்தார்.இதன் காரண மாக, ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் தொகை, 1.70 லட்சம் ரூபாயிலிருந்து, 2.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும், 23 ஆயிரம் ரூபாய்; தனி நபர் கழிப்பறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் சேர்த்து, 2.75 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
முதல்வர் அறிவித்த கூடுதல் தொகையை, நான்கு கட்டமாக பிரித்து வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.அதன்படி, அஸ்திவாரத்தின் போது, 15 ஆயிரம் ரூபாய்; லிண்டல் மட்டம் வந்ததும், 15 ஆயிரம்; மேற்கூரை அமைக்கும் போது, 25 ஆயிரம்; இறுதி தொகை வழங்கும் போது, 15 ஆயிரம் ரூபாய் என, நான்கு கட்டமாக வழங்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE