அவிநாசி:சேவூர் அருகே, முறியாண்டம்பாளையம் ஊராட்சியில், பெரிய குரும்பபாளையம் குளம் உள்ளது. அறுபது ஏக்கர் பரப்பில் உள்ள இக்குளம், கருவேல மரம், செடி கொடிகளால் முட்புதர்மண்டி கிடந்தது.குடிமராமத்து திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில், 'பொக்லைன்' உதவியுடன், குளத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. குளம் நிரம்பினால், வெளியேறும் உபரிநீர், ராமநாதபுரம் ஊராட்சி வழியாக, அனந்தகிரி, நம்பியாம்பாளையம், வெள்ளியம்பாளையம் வழியாக, தாமரைக்குளத்தில் சங்கமிக்கும்.இதனால், சேவூர், ராமநாதபுரம், அவிநாசி, தொரவலுார் சுற்றுப்புறம் சார்ந்த, 10 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். இருப்பினும், இக்குளத்தின் பரப்பு, ஆழம், அகலம் உள்ளிட்ட தெளிவான விவரம் இல்லாமல், அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரித்து, பணியை துவக்கினர்.முட்புதர்களை அகற்றி, சுத்தம் செய்த போது தான், அதன் பரப்பு தெரியவந்தது. எனவே, கூடுதலாக நிதி ஒதுக்கி, குளம் முழுவதையும் தூர்வாரி, மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தால் மட்டுமே, எதிர்பார்த்த பலன் கிடைக்கும் நிலை உருவானது.ஊராட்சி நிர்வாகத்தின் கோரிக்கை, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை அடிப்படையில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது குளம் முழுவதையும் துார்வாரி, குளக்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE