சென்னை : மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்த, தி.மு.க.,வுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை, சிறுமுகையைச் சேர்ந்த வெங்க டேஷ் பழனிசாமி என்பவர் தாக்கல் செய்த மனு: தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. இன்னும், கொரோனா வைரஸ் உள்ளதால், அனைவரும் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்படி, கிராம சபையை, கிராம பஞ்சாயத்து தான் கூட்ட வேண்டும்; வேறு யாரும் கூட்ட முடியாது. அதனால், மக்கள் கிராம சபை என, பெயரை மாற்றி விட்டனர்.
தமிழகம் முழுதும் மக்கள் கிராம சபையை கூட்டி, மற்ற அரசியல் கட்சிகளுக்கு எதிராக பொய் பிரசாரத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் தி.மு.க., வினர் செய்து வருகின்றனர்.முறையான அனுமதி பெற்று, இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை. கிராமப்புற மக்களில், குறிப்பாக, வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வைரஸ் தடுப்பு விதிமுறைகள் தெரியாது. பொதுமக்களை, அவர்களின் பாதுகாப்பை புறக்கணித்து விட்டு, இத்தகைய கூட்டங்களை நடத்துகின்றனர்.தற்போது, வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சமூக இடைவெளி, முக கவசங்கள் அணிவது என்ற வழிமுறைகள், இந்த கூட்டங்களில் பின்பற்றப்படுவது இல்லை. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை அனுமதிக்கக் கூடாது.எனவே, முறையான அனுமதியின்றி, பொது இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்த, தி.மு.க., மற்றும் அதன் தலைவருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE