புதுச்சேரி : கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், இரண்டாவது நாளாக, அமைச்சர் கந்தசாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
ஆதி திராவிடர்களுக்கான வீடு கட்டும் மானியத்தை, 4 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட 15 திட்டங்களுக்கு ஒப்புதல் தராதது குறித்து, கவர்னர் கிரண்பேடிக்கு, துறையின் அமைச்சர் கந்தசாமி கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக விவாதிப்பதற்கு, நேரம் ஒதுக்கி தர கேட்டிருந்தார். 'அமைச்சர் குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பாக, துறைகளின் செயலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது; விரைவில் விவாதிக்க, தேதி, நேரம் தெரிவிக்கப்படும்' என, கவர்னர் கிரண்பேடி பதில் கடிதம் அனுப்பினார்.இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், அமைச்சர் கந்தசாமி நேற்று முன்தினம் மாலை, காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினார்.
அமைச்சருக்கு ஆதரவாக காங்., எம்.எல்.ஏ.,க்களும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அமைச்சர் கந்தசாமியை, முதல்வர் நாராயணசாமி நேற்று காலை சந்தித்து பேசினார். போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், அவருடன் சிறிது நேரம் அமர்ந்துஇருந்தார்.முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை, பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளோம். நிதியை செலவு செய்ய கோப்பு அனுப்பினால், கவர்னர் தடுத்து நிறுத்துகிறார். ''சட்டசபை தான் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்கிறது. எனவே, தடுத்து நிறுத்த கவர்னருக்கு உரிமையும் கிடையாது; அதிகாரமும் கிடையாது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE