தகவல், தொழில்நுட்பத் துறையில் கைநிறைய சம்பளம் வாங்கிய போதிலும், கிரியேட்டிவிட்டி இல்லை என்ற எண்ணத்திலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், சென்னையில், ஆறு இடங்களில், 'தானியம்' என்ற பெயரில் இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்து வருவது பற்றி மதுசூதனன்: பூர்வீகம், சென்னை கல்பாக்கம்.
பி.டெக்., மற்றும் எம்.பி.ஏ., முடித்ததும் சில ஆண்டுகள், ஐ.டி., துறையில் வேலை செய்தேன். இதற்கிடையே, இயற்கை விவசாயத்தையும், இயற்கை விவசாயிகளையும் ஊக்குவிக்க, வேளாண் சார்ந்த தொழில் செய்யும் ஆர்வம் மனதில் அலைபாயத் துவங்கியது.முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு உண்டான முதலீட்டுக்கான சிக்கல்கள் எங்களுக்கும் இருந்தன. நீண்டகால வளர்ச்சியைக் கொடுக்கும் எந்தத் தொழிலாக இருந்தாலும், அதில் முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பெரிய வளர்ச்சி அல்லது லாபம் எதிர்பார்க்கக் கூடாது. இந்த விஷயத்தில் உறுதியாக இருந்ததால், எங்கள் இருவரின் சேமிப்பில், சில லட்சங்களை மட்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான செலவினங்களுக்காக வைத்துக் கொண்டோம்.
நிதிப் பற்றாக்குறைக்கு, சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்று, 8 லட்சம் ரூபாய் முதலீட்டில், 2010-ல் எங்கள் நிறுவனத்தின் முதல் அங்காடியைத் துவங்கினோம்.ஊழியர்கள் யாருமின்றி எல்லா வேலைகளையும் நானும், மனைவியும் தான் கவனித்துக் கொண்டோம்; தேவையற்ற செலவினங்களைத் தவிர்த்தோம். தி.நகர் பகுதிகளில் வெளியாகும் உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்ததுடன், மக்கள் வசிப்பிடங்களுக்குச் சென்று, இயற்கை விளைபொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.இவையெல்லாம் ஓரளவுக்குப் பலன் கொடுக்க, வாடிக்கையாளர்கள் எங்கள் அங்காடியைத் தேடி வந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான், படிப்படியாக எங்கள் தொழில் பயணம் வளர்ச்சியடைந்தது. வாடிக்கையாளர்கள் வட்டாரம் உயரவே, மூன்றே ஆண்டுகளில் சென்னை அண்ணாநகரிலும், பிறகு படிப்படியாக சென்னையின் பல பகுதிகளிலும் புதிய கிளைகளைத் துவங்கினேன். புதிய கிளைகளைத் துவங்கியதுடன், அவற்றில் விற்பனை செய்யும் பொருட்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகப்படுத்தினோம். இயற்கை விவசாயிகளிடம் இருந்து தான், விளைபொருட்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்வோம். வரத்து குறைந்தால், வாடிக்கையாளர்களிடம் அதைத் தெளிவுபடுத்திவிடுவோமே தவிர, ரசாயன உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்யமாட்டோம். மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதும், நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதும் தான் பெரிய சவால்.இதை உறுதி செய்து விட்டால், அவர்கள் வாயிலாகவே, புதிய வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வருவர்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE