பெரம்பலுார : அக்குபஞ்சர்' முறையில் பிரசவம் பார்த்ததால், தாய் மற்றும் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக, சப் - கலெக்டர் விசாரித்து வருகிறார்.
பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயவர்மன், 35. 'அக்குபஞ்சர்' முறையில் மருத்துவம் பார்த்து வரும் இவருக்கும், பி.எஸ்.சி., பட்டதாரியான சேலம், ஆணையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள், 29, என்பவருக்கும், ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.கடந்த ஏப்ரல் மாதம் கருவுற்ற அழகம்மாள், ஜூன், 17ல், சுகாதாரத் துறையில், தான் கருவுற்று இருப்பதாக, பதிவு செய்தார். ஆனால், தன் கணவர் விஜய வர்மனிடம் அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூறி, சுகாதாரத் துறையினர் பரிசோதனைகளுக்கு, போக மறுத்து விட்டார்.ஆக., 17ம் தேதி, வீட்டில் சொந்தமாக இயற்கை முறையில் பிரசவம் பார்த்து கொள்வதாக, தம்பதி, மருத்துவ அலுவலருக்கு விண்ணப்பம் எழுதி கொடுத்தனர்.
அழகம்மாள் சிகிச்சைக்கு வர மறுப்பதாக, அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் சவுமியாதேவி, நவ., 21ல், அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், கடந்த, 9ம் தேதி இரவு, 11:00 மணியளவில், அழகம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. விஜயவர்மன் பிரசவம் பார்த்தபோது, அழகம்மாளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அழகம்மாளை, பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதித்தபோது, குழந்தை வயிற்றிலேயே இறந்தது தெரிந்தது.
உடல் அழுகிய நிலையில், சிசுவை வெளியே எடுத்தனர். அழகம்மாள் நிலை மோசம் அடைந்ததால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அழகம்மாளும் உயிரிழந்தார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, அழகம்மாளின் தந்தை ராமர், அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். சந்தேக மரணம் என்ற பிரிவில், போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், அழகம்மாள் மரணம் குறித்து, பெரம்பலுார் சப்- - கலெக்டர் பத்மஜா விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE