மதுரை : 'வருவாய் பாதிப்பால், திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக அரசை அணுகலாம்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.
திரையரங்குகளில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர்கள் சிலர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், 'தமிழக அரசு, தன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம். ஜன., 11 வரை திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்' என உத்தரவிட்டனர்.நேற்று, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, '100 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் உத்தரவை, அரசு திரும்பப் பெற்றுள்ளது.
கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தது.தமிழக 'மல்டிபிளக்ஸ்' திரையரங்கு உரிமையாளர் சங்கம் தரப்பு, 'கொரோனா ஊரடங்கால், 10 மாதங்களாக திரையரங்குகளுக்கு வருவாய் பாதித்துள்ளது. பராமரிப்பிற்கு செலவிட வேண்டி உள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.டில்லி, நொய்டா மற்றும் வெளி மாநிலங்களில் திரையரங்கு கட்டணம் அதிகம். தமிழகத்தில் தான் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என தெரிவித்தது.
நீதிபதிகள் உத்தரவு:திரையரங்குகளில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதித்த உத்தரவை திரும்பப் பெற்ற, தமிழக அரசை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. 100 சதவீதம் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தால், அதை, 50 சதவீத இருக்கைக்கு அனுமதித்துள்ளதற்கு ஏற்ப, அடுத்தடுத்த காட்சிகளில், பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலிக்கலாம். திரையரங்கு களுக்கு முன், கூட்டத்தை தவிர்க்க போலீசார், தியேட்டர் உரிமையாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முக கவசம் அணிவது உட்பட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும்.வருவாய் பாதிப்பால், திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவற்றின் உரிமையாளர்கள், தமிழக அரசை அணுகலாம். அரசு பரிசீலித்து, தகுந்த முடிவெடுக்கலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE