ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் ஆமைகள் இனப்பெருக்கம் சீசன் துவங்கியதால் நேற்று ஒரே நாளில் 135 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.
மன்னார் வளைகுடா கடலில் உள்ள 21 தீவுகள், தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் இலங்கை தலைமன்னார் வரை 20க்கு மேலான மணல் தீடைகளை சுற்றி ஏராளமான அலுங்காமை, சித்தாமை, தோணி ஆமைகள் வசிக்கின்றன. இந்த ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக ஜன., முதல் மே வரை தனுஷ்கோடி கடலோரத்தில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். கடந்தாண்டு ஆமை இனப்பெருக்க சீசன் ஜன.,18 ல் துவங்கியது. தற்போது 7 நாட்களுக்கு முன் நேற்று தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் ஒரு ஆமை குழி தோண்டி 135 முட்டையிட்டு சென்றது.
இதனை நேற்று மண்டபம் வன அலுவலர் வெங்கடேஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் சேகரித்தனர்.பின் தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள ஆமை முட்டைகள் காப்பகத்தில், குழி தோண்டி புதைத்து பாதுகாத்தனர். 55 முதல் 60 நாட்களுக்கு பின் இந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் பொரித்ததும், அதனை சேகரித்து தனுஷ்கோடி கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE