எச்சரிக்கை!.விவசாய சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்...அரசு தரப்பு விளக்கம் சரியில்லை என வேதனை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பது கவலையளிக்கிறது. இது தொடர்பாக, அரசு தெரிவிக்கும் விளக்கம், ஏற்கும்படியாக இல்லை. இந்த சட்டங்களை, அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும். இந்த சட்டங்களை அமல்படுத்த, அரசு ஏன் அவசரப்படுகிறது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள,

புதுடில்லி : 'வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பது கவலையளிக்கிறது. இது தொடர்பாக, அரசு தெரிவிக்கும் விளக்கம், ஏற்கும்படியாக இல்லை. இந்த சட்டங்களை, அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும்.

இந்த சட்டங்களை அமல்படுத்த, அரசு ஏன் அவசரப்படுகிறது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஏழு சுற்று பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இதற்கிடையே, 'மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை' எனக் கூறி, தி.மு.க., - எம்.பி., சிவா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி., மனோஜ் ஜா உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நிலைமை மோசம்இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், எஸ். போபண்ணா, ஆர்.எஸ்.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், தொடர்ந்து நீடிப்பது கவலையளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை, அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது; நிலைமை மோசமாக உள்ளது.போராட்டத்துக்கு தீர்வு காண, மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசு சார்பில், என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரியவில்லை. என்ன மாதிரியான பேச்சு, விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே செல்கிறது என்றும் தெரியவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற சிலர், தற்கொலை செய்து உள்ளனர். முதியவர்கள், பெண்களும், போராட்ட களத்தில் உள்ளனர். விவசாயிகள், போராட்டத்தை தொடரலாம். ஆனால், அதே இடத்தில் போராட்டம் தொடர வேண்டுமா என்பது தான், முக்கியமான கேள்வியாக உள்ளது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும். யாருடைய ரத்தக்கறையும், எங்கள் கரங்களில் படிய விரும்பவில்லை.

அரசின் பொறுப்புஅதனால், சிறிது காலத்துக்கு, இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கலாம். வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க, மத்திய அரசுக்கு விருப்பம் இல்லாவிட்டால், நாங்கள் தடை விதிக்க நேரிடும். மத்திய அரசு தான், எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.இந்தச் சட்டங்களை மத்திய அரசு தான் நிறைவேற்றியுள்ளது; இதைச் சிறப்பாக அமல்படுத்த வேண்டியதும், அரசின் பொறுப்பு தான்.'வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம்' என, மத்திய அரசு நினைப்பது ஏன் என, தெரியவில்லை.

சட்டங்களை நிறுத்தி வைக்க, அரசு தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச, குழு அமைக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியதாவது:சட்டத்திற்கு, நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என, முந்தைய காலங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமை பெறாமலும், அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருக்கும் சட்டங்களை தான், நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியும். இந்த சட்டங்களை எதிர்த்து, தென் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் யாரும் போராட்டம் நடத்தவில்லை.

ஏனெனில், அதன் பலன்களை அவர்கள் புரிந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான், நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். நிறுத்த வேண்டும்இதைத் தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது : இந்த பிரச்னையை, அரசு சரியாக கையாளாததால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. போராட்டத்திற்கு எதிராக, நாங்கள் எதையும் சொல்ல விரும்ப வில்லை. போராட்டம் தொடரட்டும். பேச்சு நடக்க வேண்டும் என்பதற்காக தான், சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என, விரும்புகிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. மேலும், விவசாயிகளுடன் பேச, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்லது தற்போதுள்ள நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைப்பது பற்றிய அறிவிப்பையும், உச்ச நீதிமன்றம் வெளியிடும் என, தெரிய வந்துள்ளது.'நிறுத்தி வைப்பது தீர்வாகாது'வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது பற்றி, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறித்து, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியதாவது:வேளாண் சட்டங்களை, மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பது தான், எங்களின் முக்கிய கோரிக்கை. அவற்றை அமல்படுத்துவதை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நிரந்தர தீர்வாகாது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் பலவற்றையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த சட்டங்களுக்கு, உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை விதிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை, மத்திய அரசு வாபஸ் பெற்றால் மட்டுமே, விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எம்.எல்.ஏ., ராஜினாமா?ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், இந்திய லோக்தள கட்சியின், எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அபய் சிங் சவுதாலா. ஹரியானா சட்டசபை சபாநாயகர் சந்த் குப்தாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:டில்லியில், 40 நாட்களுக்கு மேலாக நடந்து வரும், விவசாயிகள் போராட்டத்தில், 60க்கும் அதிகமான விவசாயிகள், உயிர் தியாகம் செய்துள்ளனர். விவசாயிகள் நலனுக்கு ஆதரவாக, என் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.வரும், 26ம் தேதிக்குள், இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால், என் ராஜினாமாவை ஏற்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X