சென்னை, : சட்டசபை பொதுத் தேர்தலில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான, ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்பு பணி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி, அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.சட்டசபை பொதுத்தேர்தலில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான, ஆலோசனை கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், வருமான வரி, காவல் துறை, ரிசர்வ் வங்கி, வங்கிகள், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட, அமலாக்கத் துறைகளின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.தமிழகத்தை பொறுத்தவரை, தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, ஒவ்வொரு தேர்தலிலும், அதிகரித்தபடி உள்ளது. வரும் தேர்தலில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டு, பணத்தை வாரி இறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை எப்படி தடுப்பது, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை எப்படி கண்காணிப்பது என்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE