உடுமலை:ஆல்கொண்டமால் கோவில் திருவிழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தைப்பொங்கலை வரவேற்கும் வகையில், உடுமலை கிராமங்களில், தேவராட்டம், சலகெருது மறித்தல் என கொண்டாட்டங்கள் 'களை' கட்டியுள்ளது.உயிரினங்களின் வாழ்வியலுக்கு ஆதாரமாக உள்ள இயற்கைக்கு, நன்றி சொல்லும் விழாவாக தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களில், மாட்டுப் பொங்கல் முதல், மூன்று நாட்கள் சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.கால்நடை செல்வம் செழிக்கவும், நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்கவும், கால்நடை காக்கும் கடவுளான, ஆல்கொண்டமாலுக்கு, பால் கொண்டு வந்து அபிேஷகம் செய்வது பல நுாறு ஆண்டு பாரம்பரிய வழக்கமாக உள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆல்கொண்டமால் கோவில் திருவிழா அறிவிப்பு தாமதமான நிலையில், நடப்பு ஆண்டு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, பெரியகோட்டை, ராஜாவூர், ஜல்லிபட்டி, வல்லக்குண்டாபுரம், கொடிங்கியம், லிங்கமாவூர், அம்மாபட்டி, மொடக்குப்பட்டி, பொட்டையம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், சலகெருது மறித்தல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை காக்கும் வகையிலும், கடும் குளிரையும் விரட்டும் வகையிலும், உருமி இசையோடு, ஊருக்கு பொதுவாக உள்ள காளை மாட்டுடன் விளையாடும், சலகெருது மறித்தல் விளையாட்டில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரு கம்புகளை வைத்துக்கொண்டு, இசைக்கு ஏற்ப, சலங்கை கட்டிக்கொண்டு, காளையும், இளைஞர்கள், சிறுவர்கள் நடனமாடுகின்றனர்.தேவராட்டம்பாரம்பரியமான ஆட்டமாக தேவராட்டம் உள்ளது. உருமி இசைக்கு ஏற்ப, ஆண்கள், கைகளையும், கால்களையும், உடலையும் அசைத்து, நடமாடுகின்றனர். முதலில், இறைவனுக்கு வணக்கம் செலுத்தி துவங்கும் ஆட்டத்திற்கு, உருமி இசை பக்கபலமாக உள்ளது.மெதுவாக துவங்கும், இசையும், நடனமும், படிப்படியாக வேகமெடுத்து, 32 அடவுகள் என, இறுதியில் சாமியாட்டத்துடன் நிறைவடைகிறது. கடும் குளிர் இரவும் அதிரும் வகையில், இசையும், ஆட்டமும் என, தற்போது கிராமங்களில் பாரம்பரிய ஆட்டங்கள் துவங்கியுள்ளன.மாட்டுப்பொங்கல் முடிந்ததும், கிராம மக்கள் இணைந்து, சலகெருதுடன், தேவராட்டம் ஆடி ஆல்கொண்டமால் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல நுாறு ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய நிகழ்வுகள், இந்தாண்டும் தொடர்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE