வால்பாறை:வால்பாறையில், யானைகள் நடமாட்டத்தை தவிர்க்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன. பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணி பாதிப்படைந்துள்ளது. அதேபோன்று, இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்துகின்றன.குறிப்பாக, ரேஷன் கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. கடந்த வாரம், யானை தாக்கியதில், தேயிலை தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்நிலையில், தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:யானைகள் நடமாட்டம் காணப்படும் பகுதியில், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க செல்லக்கூடாது. யானைகளை துன்புறுத்தும் வகையில் எந்த ஒரு செயலிலும் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது.யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், தேயிலை பறிக்கும் பணிக்கு, எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்களை அனுப்பக்கூடாது. தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழை, கொய்யா, பலா போன்றவற்றை பயிரிடக்கூடாது.இது குறித்து அனைத்து எஸ்டேட் நிர்வாகத்துக்கும் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE