உடுமலை:உடுமலை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கிடப்பில், போடப்பட்டுள்ள திட்ட சாலை பணிகளை துவக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.உடுமலை நகரம் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பை-பாஸ் ரோடு இல்லாததால், கனரகம் உட்பட அனைத்து வாகனங்களும், நகரின் மத்தியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.இதனால், அனைத்து நேரங்களிலும், நகரில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.உடுமலை நகருக்கு பை-பாஸ் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நெடுஞ்சாலையை நான்கு வழித்தடமாக மாற்றுவதற்கான சர்வே துவங்கியதால், பை-பாஸ் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தற்போது, தேசிய நெடுஞ்சாலையுடன், உடுமலை-தாராபுரம், உடுமலை-பல்லடம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகளும், செஞ்சேரிமலை, திருமூர்த்திமலை, அமராவதிநகர், கொமரலிங்கம் ஆகிய மாவட்ட முக்கிய ரோடுகளும் இணைகின்றன.இந்த ரோடுகள் வழியாக வரும் வாகனங்கள், பழநி, பொள்ளாச்சி உட்பட பகுதிகளுக்கு செல்ல, பை-பாஸ் ரோடு இல்லாததால், நகருக்குள் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு சந்திப்பு உட்பட பகுதிகளில், நெரிசலும், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு, கிராமப்புறங்களிலிருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் வராமல், பிற பகுதிகளுக்கு செல்ல பல்வேறு திட்ட சாலைகள் உடுமலையில் உள்ளன.உதாரணமாக, பல்லடம், திருப்பூர், செஞ்சேரிமலை உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் நகர எல்லையிலுள்ள ஏரிப்பாளையத்திலிருந்து நகருக்குள் வராமல், மற்றொரு எல்லையான கொழுமம் ரோடு சந்திப்பிற்கு செல்ல திட்ட சாலை உள்ளது.ஆனால், திட்ட சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படாதது ஆகிய காரணங்களால் அவை காணாமல் போய் போக்குவரத்து தடைபட்டுள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு முன், தாராபுரம் ரோட்டிலிருந்து சிறிது துாரத்திற்கு திட்ட சாலை தார்ரோடாக மாற்றப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இதுவரை இல்லை.உடுமலை நகர எல்லைகளிலுள்ள, நான்கு திட்ட சாலைகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார்ரோடு அமைத்தால், நகருக்குள் நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்படும். அரசு திட்ட சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE