உடுமலை:பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில், திருவிழாவுக்காக, தற்காலிக கடைகள் அமைப்பதற்கான டெண்டர் இன்று கோவில் வளாகத்தில், நடக்கிறது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளின் நலன் காத்து, வளம் பெருக, இக்கோவிலில், ஆண்டுதோறும், பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் தைத்திருவிழா நடக்கும். பொங்கலன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலனுக்கு உரியது என்பது சுற்றுப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். இந்த கன்றுகளை திருவிழாவின் போது, கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவர். மேலும், ஆடு, மாடு, எருது, நாய் உட்பட உருவார பொம்மைகளை வைத்து கால்நடை வளம் பெருக, சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.நடப்பாண்டு, திருவிழா வரும் 15ம் தேதி துவங்குகிறது. முக்கிய சிறப்பு பூஜை, திருவிழா வரும், 16ம் தேதி நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணங்களால், திருவிழா நடப்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், விழா நடத்த, அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, திருவிழாவையொட்டி, கோவில் மைதானத்தில், தற்காலிக கடைகள், கேளிக்கை விளையாட்டு சாதனங்களுக்கு சுங்கம் வசூலித்தல் ஆகியவற்றுக்காக, கோவில் வளாகத்தில், காலை 10:00 மணிக்கு, டெண்டர் விடப்படுகிறது.இந்து அறநிலையத்துறையினர் கூறுகையில்,'பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஆல்கொண்டமால் கோவில் திருவிழா நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் அனைவருக்கும், வெப்ப பரிசோதனை செய்ய தன்னார்வலர்கள் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE