பொள்ளாச்சி:'பொள்ளாச்சியில், அ.தி.மு.க., கூட்டத்துக்கு துாய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஆகியோரை அழைத்து வருவதை தடுக்க வேண்டும்,' என தி.மு.க.,வினர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் கட்சியினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில், பொள்ளாச்சியில், பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க.,வினரை கைது செய்ய வலியுறுத்தி, எம்.பி., கனிமொழி பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு போட்டியாக அ.தி.மு.க.,வினர், திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தனர்.துாய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பணிக்கு செல்ல விடாமல் தடுத்து, அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அதிகாரிகள் வாயிலாக அறிவுறுத்தியுள்ளனர். அ.தி.மு.க., பொதுக்கூட்டத்துக்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், சப் - கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில், நகர பொறுப்பாளர் வரதராஜ், கட்சி நிர்வாகிகள், கண், காது, வாய் ஆகியவற்றை கறுப்பு துணியால் கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தி.மு.க.,வினர், 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE