மேட்டுப்பாளையம்:வெள்ளிப்பாளையம் சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதித்த இடங்களில், ஒரு அடிக்கு சேறும், சகதியுமாக உள்ளது. சாலையை சீரமைக்காத, நகராட்சி நிர்வாகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை கண்காணிக்கும், குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து, சாலையில் நாற்றுகளை நட மக்கள் முடிவு செய்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், வெள்ளிப்பாளையம் சாலை அமைந்துள்ளது. சிறுமுகை சாலை பிரிவிலிருந்து, வெள்ளிப்பாளையம் சாலையில், கரட்டுமேடு வரை, இரு பக்கம் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாக செரீப் நகர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகள், கரட்டுமேடு, வெள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.சாலையின் மையப்பகுதியில், பாதாள சாக்கடை குழாய் பதித்த பின், குழியை சரியாக மூடவில்லை. பெய்து வரும் மழையால், சாலைகளில் சேறும், சகதியும் நிறைந்த காணப்படுகிறது. நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை உள்ளது. இரவில் இவ்வழியாக, இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், சகதியில் தடுமாறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.'சகதியை அகற்றி, தார் போட வேண்டும்' என, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம், கோரினர். ஆனால், 15 நாட்களுக்கு மேலாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மேட்டுப்பாளையத்தில் பெய்துவரும் மழையால், வெள்ளிப்பாளையம் சாலையில், ஒரு அடிக்கு சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது.'சாலையை சீர் செய்யாத அதிகாரிகளை கண்டித்து, சேற்றில், நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்துவது' என்று, இப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE