கருமத்தம்பட்டி:'கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தேரோட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்' என, எலச்சிபாளையம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காட்டில் பழமை வாய்ந்த சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு தைப்பூச தேரோட்டம் பிரசித்து பெற்றது. சுற்றுவட்டார கிராம மக்கள் விழாவில் பங்கேற்று வழிபடுவது வழக்கம். வரும் தைப்பூசத்துக்கு தேரோட்டம் நடத்த அனுமதிக்க கோரி எலச்சிபாளையம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள், மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:காலங்காலமாக சென்னியாண்டவர் கோவில் தைப்பூச தேரோட்டத்தை, எலச்சிபாளையம் கிராம மக்களாகிய நாங்கள் முன்னின்று நடத்தி வருகிறோம். விழாவின் போது, திருத்தேரின் சன்னை மிராசாக ஊர் பொதுமக்கள் இருப்பர். இளைஞர் நற்பணி மன்றத்தினர் திருவீதியுலா நடத்துவர்.தைப்பூச தேரோட்டம் என்பது ஒரு விழா மட்டுமல்ல. முருக கடவுளை ராஜ அலங்காரத்தில் திருத்தேரில் அமர்த்தி வீதி உலா வருவது, சமய நடைமுறைகளில் முக்கியமானதாகும்.தமிழக அரசின், கொரோனா வைரஸ் நோய் கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட நாங்கள் உறுதி ஏற்று தயாராக உள்ளோம். உள்ளூரை சேர்ந்த குறைந்த அளவு பக்தர்களை கொண்டு, கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தேர்த்திருவிழாவை நடத்த அனுமதி தர வேண்டுகிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE