பெ.நா.பாளையம்:பழங்குடியின கிராமத்தினரின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆனைகட்டி வட்டாரம் பனப்பள்ளி கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை நேற்று திறக்கப்பட்டது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆனைகட்டி வட்டாரத்தில், பழங்குடியினர் வசிக்கும், 18 கிராமங்கள் உள்ளன. இவர்களுக்காக, ஆனைகட்டி, ஆலமரமேடு ஆகிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில் இரண்டு ரேஷன் கடைகள் செயல்பட்டன.இக்கடைகளில் பொருட்களை வாங்க பழங்குடியினர், 5 முதல் 6 கி.மீ., தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து, வந்து செல்ல வேண்டி இருந்தது. பொருட்களை வாங்கியவுடன், வாடகை வாகனம் அமர்த்தி, பொருட்களை எடுத்து செல்ல வேண்டியிருந்தது. இதற்கு தீர்வாக, நடமாடும் ரேஷன் கடையை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.ஆனால், இதுவரை மகளிர் குழுக்கள் சார்பில் ரேஷன் கடையை இயக்கி வந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ஒரு மாத கால இழுபறிக்கு பின், மாவட்ட நிர்வாகம் இறுதி முடிவு எடுத்து, நடமாடும் ரேஷன் கடையை (அம்மா நகரும் ரேஷன் கடை) நேற்று ஆனைகட்டி வட்டாரம் பனப்பள்ளியில் துவக்கியது. கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அறிக்கையில், 'ரேஷன் கார்டுதாரர்கள் சிரமத்தை போக்க, அம்மா நகரும் ரேஷன் கடை துாவைப்பதியில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது, நான்காவது புதன்கிழமையும், சேம்புக்கரை கிராமத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது திங்கள்கிழமையும், கொண்டனுார்புதுாரில் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்கிழமையும் இயங்கும்' என்று தெரிவித்துள்ளார்.கடைகள் செயல்படும் நாளில், பொருட்கள் பெற்றுச் செல்ல இயலாத நிலையில், குடும்ப அட்டைதாரர்கள், பின்னாளில் தாய் கடையில் பொருட்கள் பெற்று செல்லலாம்.தட்ஷணா, சின்னஜம்புகண்டி மகளிர் சுய உதவி வாயிலாக நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ரத்து செய்யவும், அவற்றை நஞ்சுண்டாபுரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்திடம் ஒப்படைத்து, ஆனைகட்டி- துாவைப்பதி, ஆலமரமேடு- சேம்புக்கரை, கொண்டனுார்புதுாரில் நடமாடும் ரேஷன் கடை இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கிராமத்தினர் கூறுகையில், 'மாதந்தோறும் அரசு வழங்கும் 35 கிலோ இலவச அரிசியை, வாடகை வாகனங்கள் வாயிலாக, எடுத்துக் செல்ல வேண்டி இருந்தது. தற்போது, நாங்கள் இருக்கும் கிராமத்துக்கு ரேஷன் பொருட்கள் வருவதால் எங்களுக்கு பணமும், நேரமும் மிச்சம். அலைச்சலும் இல்லை' என்றனர்.நேற்று பனப்பள்ளியில் நடந்த நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, நஞ்சுண்டாபுரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் சரவணன், ஒன்றியத் சேர்மன் நர்மதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE