பொள்ளாச்சி;''பொள்ளாச்சி பாலியல் வழக்கில், என் மகனுக்கு தொடர்பு இருப்பதாக சிறு ஆதாரத்தை கொடுத்தால், எனது, 50 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு விலகிக்கொள்கிறேன். நிரூபிக்காவிட்டால், தி.மு.க., தலைவர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலகத்தயாரா?'' என துணை சபாநாயகர் சவால் விடுத்துள்ளார்.பொள்ளாச்சியில், தி.மு.க., வினரை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:எனது மகனை, பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி, தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை, போலீசில் புகார் கொடுக்க கூறியதே நான் தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால், நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தேன்.அப்போது, என் பெயரையும், எனது மகன் பெயரையும் இந்த வழக்கில் தொடர்புபடுத்தி பேச மாட்டேன் என, ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். இப்போது, மறுபடியும் பேசி வருகிறார்.பாலியல் வழக்கில், என் மகனுக்கு தொடர்பு இருப்பதாக சிறு ஆதாரத்தை கொடுத்தால், எனது, 50 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு விலகிக்கொள்கிறேன். அவ்வாறு, நிரூபிக்காவிட்டால், தி.மு.க.,தலைவர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலகத்தயாரா? பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஓட்டு சேகரிக்கும் தி.மு.க.,வின் தந்திரம் பலிக்காது. இவ்வாறு, ஜெயராமன் பேசினார்.அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க., இலக்கிய அணி செயலாளர் வளர்மதி, அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா ஆகியோர் பேசினர்.யாராக இருந்தாலும் நடவடிக்கை!அமைச்சர் வேலுமணி பேசியதாவது:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், யாராக இருந்தாலும் சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்கும். அ.தி.மு.க.,வில் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்தால், உடனடியாக கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், தி.மு.க., நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு இருந்து, போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும், கட்சி ரீதியாகநடவடிக்கை எடுப்பதில்லை.எந்த ஆதாரமும் இல்லாமல், அரசியலில் சுயலாபம் தேடவும், ஓட்டுக்காகவும், பாலியல் விவகாரத்தை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. பொள்ளாச்சி பெண்களையும், கலாசாரத்தையும் இழிவுபடுத்துவதை தி.மு.க.,வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.சட்டசபை தேர்லில், கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும்; தி.மு.க.,வின் பொய் பிரசாரம்எடுபடாது.இவ்வாறு, பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE