கோவை;''நேர்மைக்கும் ஊழலுக்கும் இப்போது போர் நடக்கிறது. நாங்கள் நேர்மையின் பக்கம் நின்றுள்ளோம்,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேசினார்.கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கமல் பிரசாரம் செய்தார். அன்னுாரில் அவர் பேசுகையில், ''செல்லும் இடத்தில் எல்லாம் அன்பான வரவேற்பு கிடைக்கிறது. அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்கள், சேர்க்கப்படும். திறந்த சாக்கடை, பாதாள சாக்கடை பிரச்னை எல்லாம் முடிவுக்கு வரும். ''புதிதாக ஓட்டுப் போட வருவோர், தமிழக அரசியலை மாற்றுவர். நேர்மைக்கும் ஊழலுக்கும் இப்போது போர் நடக்கிறது. நாங்கள் நேர்மையின் பக்கம் நின்று உள்ளோம். நேர்மைக்கு ஓட்டு போட வேண்டும். இது காசு கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டம் அல்ல. இங்கு நேர்மை நிரம்பி வழிகிறது,'' என்றார்.மாற்றத்துக்கான சிக்னல் கோவை மாவட்டம், துடியலுார் பஸ் ஸ்டாண்டில் நடிகர் கமல் பேசுகையில், ''தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான சிக்னல் கிடைத்து விட்டது. பொதுமக்களாகிய உங்கள் முகத்தில், குரலில், கண்களில், அது தெளிவாக தெரிகிறது. இது சரித்திரம் நமக்கு தந்துள்ள அரிய வாய்ப்பு. இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜாதியை பார்த்து யாரும் ஓட்டுப்போடாதீர்; சாதிப்பவர் யார் என்று பார்த்து ஓட்டுப்போடுங்கள்,'' என்றார்.குழந்தையை வாங்க மறுப்புதுடியலுார் கூட்டத்தில், ஒரு நபர் தன் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் எனக்கூறி, கமலிடம் குழந்தையை கொடுக்க முயன்றார். ஆனால், கமல், ''கொரோனா காலத்தில், இப்படிப்பட்ட கூட்டமான இடத்தில், ஏன் குழந்தையை கொண்டு வருகிறீர்கள்,'' என, கடிந்து கொண்டு குழந்தையை வாங்க மறுத்து விட்டார். மேலும், தொடர்ந்து அந்நபர் வற்புறுத்தவே, ''பெண் குழந்தையாக இருப்பதால், என்னுடைய தாய் ராஜலட்சுமி பெயர் வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.ஆம்புலன்சுக்கு வழிஅன்னுாரில் கமல் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு ஆம்புலன்ஸ் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனே பேச்சை நிறுத்திய கமல், ''ஆம்புலன்சுக்கு தயவு செய்து வழி விடுங்கள்,'' என, இரண்டு முறை கூறினார். இதையடுத்து, ஆம்புலன்சுக்கு வழி விடப்பட்டது. இதற்கு கமல் நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE