புதுச்சேரி; மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மின் கட்டண வசூல் மையம் மூடப்பட்டது.புதுச்சேரி மின் துறை ஊழியர்களின் போராட்டத்தால், தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த டிச.,மாதம், மின் துறை தனியார் மயமாக்கலுக்கு தேவையான வரைபடம் தயாரிக்க, தலைமை செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இதனால் ஊழியர்களின் போராட்டம் கடந்த டிச. 4ம் தேதி மீண்டும் துவங்கியது. புயல் மழையால் மின் இணைப்புகள் துண்டித்து மக்கள் சிரமப்பட்டனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில், மின்துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். முதல்வர் நாராயணசாமி ஊழியர்களை அழைத்து பேசினார். அப்போது, ஜனவரி முதல் வாரம் டில்லி சென்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை சந்திக்க முடிவெடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் டில்லி செல்ல ஏற்பாடு செய்யவில்லை. தனியார் நிறுவனத்தினர், தனியார் மயமாக்கலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை துவங்கினர். இதனால், மின் துறை பொறியாளர்கள், ஒருங்கிணைந்த தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர், நேற்று 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தனர். மின்துறையில் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த கலெக்டர் தடை விதித்தார்.இந்நிலையில், திப்ராயப்பேட்டை மின்துறை தலைமை அலுவலக வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று திரண்டனர். போராட்டம் நடத்த தடை உள்ளது. மீறினால் நடவடிக்கை எடுப்போம் என போலீசார் கூறினர். இதனால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தாமல், பணிகளை புறக்கணித்து கூட்டமாக திரண்டு ஆலோசனை செய்தனர்.இந்த போராட்டத்தால் மின்துறை கட்டண வசூல் மையம் மூடப்பட்டது. கட்டணம் செலுத்த வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர். மதியம் மின்துறை போராட்ட குழுவினர், தொழிலாளர் துறை ஆணையர் வல்லவனுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE