புதுச்சேரி; கவர்னரை கண்டித்து, புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் இரண்டாவது நாளாக அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.ஆதிதிராடவிடர்களுக்கான வீடு கட்டும் மானியத்தை ரூ. 4 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட 15 திட்டங்களுக்கு ஒப்புதல் தராதது குறித்து கவர்னர் கிரண்பேடிக்கு, நலத் துறை அமைச்சர் கந்தசாமி கடிதம் அனுப்பினார். இது குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அமைச்சர் குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பாக துறைகளின் செயலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது; விரைவில் தேதி, நேரம் தெரிவிக்கப்படும்' என, கவர்னர் கிரண்பேடி பதில் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி நேற்று முன் தினம் (10ம் தேதி) மாலையில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் துவக்கினார். அமைச்சருக்கு ஆதரவாக காங்., எம்.எல்.ஏ.,க்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அமைச்சர் கந்தசாமியை முதல்வர் நாராயணசாமி நேற்று காலை சந்தித்து பேசி, போராட்டத்திற்கு ஆதரவாக சிறிது நேரம் அமர்ந்திருந்தார். வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூ., கட்சி நாரா கலைநாதன், அரசு கொறடா ஆனந்தராமன், எம்.எல்.ஏ.,க்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார், விஜயவேணி பங்கேற்றனர். முதல்வர் நாராயணசாமி கூறும் போது, 'அமைச்சர் கந்தசாமியின் கோரிக்கைகள் நியாயமானவை. எங்கள் அரசுக்கு தொல்லை தருவதாக நினைத்து மாநில வளர்ச்சிக்கு கவர்னர் குந்தகம் விளைவிக்கிறார். எங்களால் ஒப்புதல் தந்து அனுப்பிய கோப்புகளை மாற்றி எழுதுவது, தடுத்து நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளோம். நிதியை செலவு செய்ய கோப்பு அனுப்பினால் கவர்னர் தடுத்து நிறுத்துகிறார். சட்டசபைதான் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்கிறது. தடுத்து நிறுத்த கவர்னருக்கு உரிமையும் கிடையாது; அதிகாரமும் கிடையாது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE