கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் வாடகை கட்டடத்தில் இயங்கும் நுாலகத்தினை மாவட்ட நுாலகமாக தரம் உயர்த்தி சொந்தக்கட்டடத்திற்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 1957-ஆம் ஆண்டு நுாலகம் துவங்கப்பட்டது. அப்போது முதல் வ.உ.சி., நகரில் ஒரு தனியார் வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக 750 ரூபாய் வாடகையில் இயங்கி வந்தது. வீட்டு உரிமையாளர் எதிர்ப்பினையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக விளாந்தாங்கல் சாலையில் வேறொரு வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நுாலகத்தில் 50 லட்சம் மதிப்பில் 60 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 6,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 300க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர். காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்கும் இந்நுாலகத்தில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நுாலகர்கள் மூன்று பேர், துப்புரவு பணியாளர் ஒருவர் என 5 பேர் ஷிப்ட் முறையில் பணியாற்றுகின்றனர்.முறையான சாலை வசதி மற்றும் வழித்தட அறிவிப்பு இல்லை. நுாலகத்தில் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., முதல் அனைத்து குரூப் தேர்வுகளுக்குமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் வைஷ்ணவி நகரில் நுாலகம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து செல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால் அங்கு செல்லும் வாசகர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் இங்கு ஜெராக்ஸ் மிஷின், இண்டர்நெட் மற்றும் பிரிண்டருடன் கூடிய கம்ப்யூட்டர் வசதியும் உள்ளது.
கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம கிளை நுாலகங்களுக்கு மாதாந்திர செலவுத் தொகை வழங்கும் நுாலகமாக இருந்து வருகிறது. பணம் வழங்கப்படும் நாட்களில் அனைத்து நுாலக பணியாளர்களும் இங்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. அத்துடன் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகராக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே நுாலகத்திற்காக 15 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்றளவும் அங்கு கட்டடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.ஆனால் மாவட்ட தலைநகர் அந்தஸ்தை எட்டிய கள்ளக்குறிச்சி, கல்விக்குறிச்சி என சொல்லும் அளவிற்கு கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கி வருகிறது.
ஆனால் இங்கு அரை நுாற்றாண்டுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் நுாலகம் இயங்கி வருவது இப்பகுதி கல்வியாளர்களுக்கு மிகுந்து வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகர மக்களின் நுாலக கனவை நினைவாக்கிட பழமை வாய்ந்த இந்நுாலகத்தினை மாவட்ட நுாலகமாக தரம் உயர்த்தி, புதுப்பொலிவுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட நுாலகமாக மாற்றி புதிய கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE