சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டுபட்டி பழைய புனித அந்தோணியார் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜன.,18ல் 250 காளைகள் பங்கேற்கும் மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இங்குள்ள பழைய புனித அந்தோணியார் கோயிலில் தை பொங்கலை முன்னிட்டு ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஜன.18 ல் நடக்கிறது. முன்னதாக ஜன.,17 அன்று பழைய புனித அந்தோணியார் கோயிலில் இருந்து இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார் நகர் வலம் வருவார். ஜன.,18 அன்று காலை அந்தோணியார் கோயில் முன் அனைத்து தரப்பினரும் பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்துவர். இந்த விழாவில் குழந்தைவரம் வேண்டி கரும்பு தொட்டில் கட்டுதல், மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல் நிறைவேற்றுவர். அன்று மதியம் விழாவிற்கு வருபவர்களை வீட்டிற்கே அழைத்து சென்று சைவ உணவு வழங்குவர்.புழுதி பறக்க போகுது களம்: ஜன.,18 அன்று மஞ்சுவிரட்டு நடப்பதால், மஞ்சுவிரட்டு பொட்டலில் தடுப்பு அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் 250 காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக மதியம் 1:30 மணிக்கு ஊர் நாட்டார்கள் தொழுவில் இருந்து அவிழ்த்து விடுவர். புழுதி பறக்க காளைகள் வீரர்களை நோக்கி வரும், அவற்றை அடக்க வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதை தொடர்ந்து கட்டுமாடுகள் அவிழ்க்கப்படும்.அரசு விதிப்படி மஞ்சுவிரட்டு: விழாக்குழு தலைவர் சேவுகபெருமாள் கூறியதாவது, அரசு விதிமுறைகளை கடைபிடித்து மஞ்சுவிரட்டு நடத்தப்படும். அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக பழைய புனித அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெறும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE