ஆர்.கே.பேட்டை - விறுவிறுப்பாக நடந்து வந்த கட்டுமான பணிகள், செங்கல் விலை உயர்வு காரணமாக, தற்போது, தொய்வடைந்துள்ளன.
ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், 10 மாதங்களாக, ஏராளமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சொந்த வீடு கட்ட திட்டமிட்டிருந்தவர்கள், தங்களின் பணியை முழு ஓய்வில், நிம்மதியாக மேற்கொண்டனர்.அதற்கு ஏதுவாக, செங்கல் விலையும் கட்டுக்குள் இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில், சிமென்ட் விலை சற்று உயர்ந்தாலும், கட்டுமான பணிகள் தொடர்ந்தன.
பெரும்பாலான கட்டுமானங்கள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் நிலுவையில் உள்ள பணிகளை, வரும் தை மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே, புயல், மழை பாதிப்பால், செங்கல் சூளைகள் பாதிக்கப்பட்டன. இதனால், செங்கல் விலை உயர துவங்கியது. கடந்த ஜூலை மாதத்தில், ஒரு செங்கல், 5 - 5.70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.தற்போது, 6.30 - 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், கட்டுமான ஒப்பந்தம் மேற்கொண்ட மேஸ்திரிகள், ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். வரும் சித்திரை மாதம் வரை, செங்கல் விலை குறைய வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE