ஊத்துக்கோட்டை - -ஆரணி ஆற்றின் மேல் கட்டி முடிக்கப்படாத பாலத்தில், பொதுமக்கள் நடந்து சென்ற நிலையில், கல்லுாரி மாணவர் உள்ளிட்ட இருவர் மொபைல் போனில் படம் எடுத்த போது மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்தனர்.ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றின் மேல், 28 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக, கட்டி வரும் நிலையில், பணிகள் முடியவில்லை.'நிவர், புரெவி' புயல்களால் பெய்த மழையால், ஆரணி ஆற்றில் அமைத்த, தரைப்பால சாலை சேதமானது. பாலத்தின் மேல் தற்காலிக இரும்பு படிக்கட்டு அமைத்து பொதுமக்கள் அதில் நடந்து செல்கின்றனர்.நேற்று காலை, சீத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு மகன் சரண், 16. கல்லுாரி மாணவர். தன் தாயாருடன், பாலத்தின் மீது நடந்து சென்றார். அப்போது உயர் மின் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பம் அருகே தண்ணீர் செல்வதை, மொபைல் போனில் படம் எடுத்தபோது, மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்தார்.மதியம், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த, ஸ்ரீதர், 26, அதேபோல், படம் எடுத்த போது மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்தார்.ரத்த காயங்களுடன் இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE