உத்திரமேரூர் - கம்மாளம்பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த, 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்கதிர்கள், தண்ணீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழையால், உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி ஏரி முழுமையாக நிரம்பி, 20 நாட்களாக, உபரி நீர் கலங்கல் வெளியேறுகிறது.உபரி நீர் செல்லும் போக்கு கால்வாய், ஒன்பது கால்வாயாக பிரிந்து, தட்டாம்பூண்டி ஏரிக்கு செல்லும். தற்போது, ஒரு கால்வாய் வழியாக மட்டுமே, தட்டாம்பூண்டி ஏரிக்கு உபரிநீர் செல்கிறது.மற்ற கால்வாயில் செல்ல வேண்டிய உபரிநீர், விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், அறுவடை தயாரான, 10 ஏக்கருக்கு பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கம்மாளம்பூண்டி விவசாயி நவீன்குமார் கூறியதாவது:வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, குத்தகை நிலத்தில், 3 ஏக்கரில் பொன்னி ரக நெல் பயிரிட்டு இருந்தேன்.அறுவடைக்கு செய்ய சில நாட்களே இருந்த நிலையில், உபரி நீர் புகுந்ததால், நெற்கதிர்கள் தண்ணீர் மூழ்கி முளைக்க துவங்கிவிட்டது.இனி, என்ன செய்வது என்றே தெரியவில்லை. அரசு நிவாரணம் வழங்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீரை நிறுத்துவதோடு, நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE