பொது செய்தி

தமிழ்நாடு

பல நதிகளின் சங்கமம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
வி.சுப்ரமணியம், ராஜலக்ஷ்மி, ருக்மிணி ரமணி, பத்மா வீர ராகவன், ஏ.சுந்தரேசன், பி.எஸ்.என் எனும் பி.எஸ். நாராயணசாமி, லஷ்மி நடராஜன் --- யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் தான் காயத்ரி வெங்கட்ராகவனை உருவாக்கியவர்கள்; அவரின் குருமார்கள். இத்தனை நதிகள் உள்ளே பாய்ந்திருக்கின்றன என்றால் அவரது இசை எப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருக்கும்!'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' நேரலையாக நமக்களித்த

வி.சுப்ரமணியம், ராஜலக்ஷ்மி, ருக்மிணி ரமணி, பத்மா வீர ராகவன், ஏ.சுந்தரேசன், பி.எஸ்.என் எனும் பி.எஸ். நாராயணசாமி, லஷ்மி நடராஜன் --- யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் தான் காயத்ரி வெங்கட்ராகவனை உருவாக்கியவர்கள்; அவரின் குருமார்கள். இத்தனை நதிகள் உள்ளே பாய்ந்திருக்கின்றன என்றால் அவரது இசை எப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருக்கும்!'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' நேரலையாக நமக்களித்த கச்சேரியில், வரிசையாக காயத்ரி பாடிய முதல், மூன்று பாடல்களுக்கு எந்தவிதமான ஆலாபனையையும் நமக்களிக்கவில்லை. முதல் 'நாட்டை' பாடலுக்கு மட்டும் பல்லவிக்கென்று பல ஆவர்த்தன ஸ்வரக்கோர்வை ஒன்று.உண்மையில், ஆனந்தபைரவி கிருதிக்கு ஆலாபனை தேவையில்லைதான். இது, தன்னுள் எல்லாவற்றையும் அடக்கியுள்ள ஒரு பாடல். 'கோபுச்சயதி' எனும் படி பசுவின் வாலைப் போல ஆரம்பத்தில் அகலமாகவும், பின் செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகும் ஒரு சாகித்திய அமைப்பைக் கொண்டிருக்கும். இதை நிர்வகித்துப் பாடினாலே 'ஒரு ஆயிரம் பெறும்'. இந்தக் கிருதியின் கம்பீரம், காயத்ரி பாடிய விதத்தில் நன்கு வெளியானது. இவர் மெயினாக அமைத்துக் கொண்ட சங்கராபரணத்திற்கு, ஒரு நீண்ட அடிப்படைகளைச் சார்ந்த ஆலாபனை. முதலில் குறிப்பிட்ட ஆசான்களிடம் கற்றல், பிறகு அப்பியாசம், அல்லவை நீக்கி, தெளிந்த நீரென அளித்தல், இவையெல்லாம் ஒரு ஒழுங்குடன் வந்தன. வேரோட்ட பலம் எல்லாவற்றிலும். இங்கே அனைவரும் பாடும் சங்கராபரணம் தானே என்றில்லாமல், ஒரு உண்மைத் தன்மையுடன் இதை அணுகுதலைக் கண்டோம். நெரவல் மற்றும் கற்பனைஸ்வரங்கள், 'ராஜ ராஜேச' எனும் இடத்தில் வந்தன. இதன் பிறகு ஒரு ராகம், தானம் பல்லவி ஹம்ஸ நாதத்தில். இதன் வரி 'ஸரஸ்வதி பகவதி பாஹி ஹம்ஸவாஹினி நாதரூபிணி' என்பதாக இருந்தது. திஸ்ர திருபுட தாளத்தில் கண்ட நடையில் அமைத்திருந்தார். இதன் ராகமாலிகை ஸ்வரங்களாக வந்தன ஆரபி, ஸரஸ்வதி மற்றும் ஹம்சவிநோதினி ராகங்கள். தெள்ளத் தெளிவுடன் இவர் அந்தந்த ராகத்தின் வயப்பட்டு, அவற்றிற்கான பிரத்யேக பிடிகளைப் பாடி உணர்த்த, வயலினில் சாருமதியும், 'நான் எதற்கும் சளைத்தவரில்லை' என்பதாக இவற்றை நொடிப்பொழுதில் கிரகித்து வழங்கியது போற்றுதலுக்குரியது.காயத்ரி கச்சேரியின் கடைசியில் பாடிய திருஅருட்பாவிற்கு மெட்டமைத்தவர், பத்ம பூஷண் திரு பி.எஸ். நாராயணசாமி என்பதைத் தெரிவித்தார். சாருமதி ரகுராமன் மெயினான சங்கராபரணத்திற்கு எனும் போது, தன் முழு கலாசாதுர்யத்தையும் வயலினில் இழை இழையாக வாசித்து, ராகத்தை வெளிக் கொணர்ந்தார். மனோஜ் சிவா மிருதங்கத்திலும், கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சிராவிலும், பாடல்களின் போது பொறுப்புணர்ந்து மெயின் பாடகருக்குத் துணைநின்று வாசித்தனர்.தனியாவர்த்தனத்தின் போது, ஒருவருக்கொருவர் மோராக்கள் கோர்வைகள் ஆகியவற்றை அவற்றின் கணக்குகளின்படி வாசித்தளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X