மைசூரு; கோடை காலத்தில், பண்டிப்பூர் தேசிய பூங்காவில் விலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க, 'சோலார் பம்ப் செட்' அமைக்கப்பட்டுள்ளது.மைசூரு மாவட்டம், பண்டிப்பூர் தேசிய பூங்காவில், 2,500 யானைகள், 173 புலிகள், 300க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன.இவ்விலங்குகளுக்கு தாகம் தணிப்பதற்காக, வனப்பகுதி முழுவதும், 365 குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பொங்கலுக்கு பின், வெயில் தாக்கம் மெல்ல அதிகரிக்கும். இதனால், வனப்பகுதியிலுள்ள குளங்கள் வறண்டு போகும் வாய்ப்புள்ளது. இத்துடன், 2019 ல், வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட தீவிபத்தை யாராலும் மறக்க முடியாது.இது போன்ற சம்பவம், மீண்டும் நடக்காத வகையில், வனப்பகுதியில், தீ ஏற்படக்கூடும் என கருதப்படும் இடங்களில், தீ பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில், 450 தீயணைப்பு ஊழியர்கள், 600 வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இத்துடன், பேகூர், மத்துார் பகுதிகளில் குறைவான மழை பெய்த இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். அப்பகுதி கிராமத்தினர், மலைவாழ் மக்களை அணுகி, தீ விபத்து ஏற்படாமல் தடுக்க ஒத்துழைக்கும்படி, வனத்துறையினர் கேட்டுள்ளனர்.இது குறித்து, பண்டிப்பூர் புலிகள் வனப்பகுதி அதிகாரி நடேஷ் கூறியதாவது:கபினி, நகு அணைகளில், தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. 2019ல், பண்டிப்பூர் தேசிய பூங்காவுக்குள் உள்ளேயும், வெளியேயும் தேவையான அளவு தண்ணீர் இருந்தது. கடந்தாண்டு, மழை பற்றாக்குறையால், பல குளங்கள் வறண்டுள்ளன.வெயில் காலம் துவங்கவுள்ளதால், பூங்காவிலுள்ள, 365 குளங்களில், 45 குளங்களில் சோலார் பம்ப் செட் மூலம், தண்ணீர் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE