பெங்களூரு: பா.ஜ., தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் பெயரை பயன்படுத்தி, பலரை மோசடி செய்து பணம் சம்பாதித்த, சாமியார் யுவராஜ் தொடர்பான வழக்கை, சி.ஐ.டி., அல்லது, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைப்பது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா உட்பட, மத்திய, மாநில தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் பெயரை பயன்படுத்திய யுவராஜ், உயர் பதவி பெற்று கொடுப்பதாக நம்ப வைத்து, ஏராளமானோரிடம், பணம் வசூலித்து மோசடி செய்தார்.இவரிடம் ஏமாந்தவர்களில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என பலர் அடங்குவர். கோடிக்கணக்கான மதிப்பில், சொத்து குவித்த யுவராஜ், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவருக்கு ஓரளவு ஜோதிடப்புலமை இருந்தது. இவர் கூறிய சில ஆருடம் பலித்ததால், பா.ஜ., தலைவர்கள், நடிகர், நடிகையர் யுவராஜுடன், நட்பு வைத்திருந்தனர்.இவர்களுடனான தொடர்பை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பணம் சம்பாதித்துள்ளார். வெவ்வேறு மாவட்டங்களில், தன் குடும்பத்தினர் பெயரில், யுவராஜ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பதிவு செய்துள்ளார்.இவரது வங்கி லாக்கரை திறந்த போது, பெருமளவில் சொத்துப்பத்திரங்கள் கிடைத்தது. 450 கோடிக்கும் அதிகமான சொத்துகள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இவரது சட்டவிரோத சொத்துகள், பணப்பரிமாற்றம் தொடர்பாக, ஏற்கனவே அமலாக்கப்பிரிவினருக்கு, சி.சி.பி., அதிகாரிகள், தகவல் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.சி.சி.பி., விசாரணையில், யுவராஜின் சட்டவிரோத செயல்பாடுகள் ஒவ்வொன்றாக வெளியாகிறது. இவர் விமான பயணத்துக்காகவே, எட்டு கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்.டில்லி உட்பட, வெவ்வேறு மாநிலங்களின் அரசியல்வாதிகளுடனும், இவருக்கு தொடர்புள்ளது. எனவே சி.ஐ.டி., அல்லது, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைப்பது குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE