சுவாமி விவேகானந்தர் என்ற பெயரினைக் கேட்ட மாத்திரத்திலேயே நம்முடைய நாடி நரம்புகள், ரத்த நாளங்கள், உள்ளம், உணர்வு கள் என அனைத்திலும் புதிய ஓளி புகுந்து பரவுவது போலொரு பேருணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
அவருடைய வார்த்தைகளை எந்த மொழியில் படித்தாலும் அவரே நம்மோடு பேசுவது போன்றொரு அனுபவம் நம்முள் நிகழும். ராமகிருஷ்ணரின் தலைசிறந்த சீடர். பாரத தேசத்தின் வேதப் பொருளை, உபனிடத தத்துவங்களை, யோக ரகசியங்களை, அதன் நீண்ட பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைத்து, உலகப் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியதற்கு முதலாவதாக வித்திட்டவர்.
துறவிற்கு பெருமை
வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில், பல தலைமுறைகளுக்கான மாபெரும் சிந்தனைகளை தன் ஆன்ம ஒளியினால் அளித்தவர். ஆன்மிகம் மட்டுமல்லாது, மனித குலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றினை, ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்தினை, வாழும் முறையை முற்றிலும் அறிந்த தீர்க்கதரிசி. சிந்தனைக்கெட்டாத ஆற்றல்களுக்கும், இடையீடற்ற உழைப்பிற்கும் உறைவிடமாகத் தன் தொண்டினால் துறவிற்கும் பெருமை சேர்த்தவர்.அவர் நமக்களித்துச் சென்ற மாபெரும் செய்திகள் காலத்தால் அழியாதது. நம் நாட்டு இளைஞர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை மிக ஆழமானது. குறிப்பாக தமிழக இளைஞர்களிடத்தில் மாறாத அன்பும், அவர்களுடைய ஆற்றல்கள் மீது அதீத மதிப்பும் கொண்டிருந்தார்.
இளைஞர்களுக்கென்று தெளிவான பலதிட்டங்களை, பாதைகளை வகுத்துக் கொடுத்தார். இளைஞர்களே! வாழ்வைத் துணிவோடும், உறுதியோடும் எதிர் கொள்ளுங்கள். வலிமையே வாழ்வு. பலவீனம் மரணம். ஆகவே பலவீனத்தை அறவே துறந்து வாழுங்கள் என்றார்.
பொறுப்பு
முதலில் இளைஞர்கள் பொறுப்பு மிக்கவர்களாக இருக்க வேண்டும் எனக் கருதினார். ஒவ்வொரு இளைஞரும் முழுப் பொறுப்பினையும் தங்கள் தோள்களில் சுமந்து, விதியை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய ரத்தத்தில் கலாசாரமும், பண்பாடும் ஊறிக் கலந்திருக்க வேண்டும், வாழ்வின் பெரிய அதிர்வுகளை, சவால்களை அறிவின் துணை கொண்டு மட்டுமே எதிர்கொள்ள இயலாது. அவற்றை எதிர்கொள்ள பண்பெனும் உரமிட்டு வளர்த்த உள்ளம் அவசியம்.பல சவால்களையும், அதிர்வுகளையும் தாங்கிச் சாதித்தவர் சுவாமி. அமெரிக்கா சென்ற பொழுது, சர்வ சமயப் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள நிதி வசதியில்லை. பலர் அவரை தங்கள் இயக்கத்தில் சேர்ந்தால் உதவுவதாகக் கூறினர். கொள்கை உடன்பாடு இல்லாத காரணத்தினால் அவர்களுடன் சேர மறுத்தார். “இந்தியாவிலிருந்து வந்திருக்குமொரு பிசாசு உணவின்றி , உதவியின்றி மடியப்போகின்றது” எனக் கொக்கரித்தனர். ஆனால் சற்றும் தளராது நிமிர்ந்தார்.
சொற்பொழிவுகள்
சிகாகோ சர்வசமயப் பேரவை யில் உரையாற்றினார். எனது அருமை அமெரிக்க சகோதர, சகோதரிகளே! என அவர் கூறிய அந்த வார்த்தைகளுக்கு ஒட்டுமொத்த சபையும் எழுந்து நின்று கரகோஷமிட்டது. இன்றுவரை உலகின் மிகச் சிறந்த சொற்பொழிவாக சிகாகோ நகர சொற்பொழிவு திகழ்கிறது.இளைஞர்கள் கல்வியறிவு மிக்கவர்களாக இருப்பதின் அவசியத்தை வலியுறுத்தினார். ஏட்டுக் கல்வியை மட்டுமே உள்ளத்தில் ஏற்றிப் பயனில்லை. கல்வியென்பது நம்முள் இருக்கும் உன்னதமான பல பரிமாணங்களை முழுமையாக வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். முழு ஆளுமைத் திறனும் வெளிப்பட வேண்டும். பண்பைச் செதுக்குதல், மனத் திண்மையை வளர்த்தல், அறிவை விரிவாக்குதல் என்னும் முக்கோண வடிவுடையதாக கல்வி இருக்க வேண்டும். சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அத்தனை விதமான அறியாமையையும், பிரிவினைவாதங்களையும், மூடப்பழக்கங்களையும் முற்றிலும் தகர்கக் கூடிய கல்வியை இளைஞர்களுக்குப் புகட்ட வேண்டும் என்றார். ஒட்டுமொத்த பலவீனங்களையும் நீக்கும் கல்வியே சரஸ்வதியின் வடிவென்றார். ஆன்மிகக் கண்களைத் திறக்கும் கல்வியே இளைஞர் களுக்கு உயர் நம்பிக்கைகளை ஊட்டும் கல்வியாகும்.
சுய நலமின்மை
“இளைஞர்களே! முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். எது உடலை, மனதை, புத்தியை பலவீனப்படுத்துக்கின்றதோ அதனை நஞ்செனக்கருதி துாக்கி வீசுங்கள்” என்னும் குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.இளைஞர்கள் சுயநலமற்றவர்களாகப் பணி செய்ய வேண்டுமெனக் கருதினார். மனிதர்களிடத்தில் மேலோங்கிக் கிடக்கும் சுயநலமெனும் நஞ்சே தேச வளர்ச்சிக்கு மாபெரும் இடையூறாக இருக்கிறது. நாடும், சமுதாயமும் வளர்ச்சி அடைய வேண்டுமெனில் எல்லாத் துறைகளிலும் தன்னலமற்ற சேவை தேவைப்படுகிறது. “நான் ஒருபொழுதும் வெறும் சீர்திருத்தங்களையோ, மாற்றங்களையோ விரும்பவில்லை. வளர்ச்சியை மட்டுமே நம்புகின்றேன்” என்றார்.மாற்றங்கள் தானாக நிகழ்பவை. ஆனால் வளர்ச்சி என்பது பலர்கூடித் திட்டமிட்டு, சுயநலம் விடுத்து பணியாற்றினால் மட்டுமே நேரும். அதற்கு மாபெரும் தியாகம் தேவைப்படுகிறது. இயற்கை தன்னலம் பாராது தன் பணி செய்கின்றது.நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் நம் இதயத்தின் ஆழத்திலிருந்து உணர்வுப்பூர்வமாக எழ வேண்டும். அப்பொழுதுதான் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் பணிசெய்ய இயலும். புத்தி சிந்திக்கட்டும், இதயம் உணரட்டும், உடல் உழைக்கட்டும். அவ்வாறு செய்தால் மகத்தான வளர்ச்சியினை நம்மால் ஏற்படுத்த முடியும் என உரக்கக் கூறினார். அவர் அழைப்பினை ஏற்று பலர் ராமகிருஷ்ணா மடத்தில் துறவியாயினர். இன்னும் பலர் விவேகானந்தா கேந்திரத்தில் முழுநேர தன்னார்வத் தொண்டராயினர். பல்லாயிரக் கணக்கான இல்லறத்தார்கள் சுயநலமின்றி சமூக அக்கறையுடன் பணி செய்து வருகின்றனர்.
தெய்வீக ஆற்றல்
இளைஞர்கள் இறையாற்றலும், இறை நம்பிக்கையும் உடையவர்களாக இருத்தல் அவசியம் . இறைநெறியே அறநெறியை வளர்க்கும். நாம் ஒவ்வொருவரும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்கள். அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வாழ்கை பலவகையில் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கின்றது. அதை அலட்சியப்படுத்தாது, இறை நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவன் ஆலயத்தில் மட்டுமல்ல, நம் எல்லோர் இதயத்திலும் , காணும் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாகுபாடின்றி அனைவருக்கும் உதவும் அன்புள்ளமே இறைவனின் நிரந்தர இருப்பிடம். அவருடைய இக்கருத்துக்கள் ராமேஸ்வரம் ஆலயத்தில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது. பலகருத்துக்களைப் பயனற்றுப் பேசிச் சென்றவரல்ல அவர். அனைத்தையும் செயல் வடிவமாக்கிக் கொடுத்த செயல்வீரர். அவருடைய் சிந்தனைகள் தேசிய லட்சியமாக மாற வேண்டும். நாம் காணும் இந்தியாவைக் காட்டிலும் மிக வலிமையான இந்தியாவை உருவாக்க எண்ணிய தலைசிறந்த தேசிய சிந்தனையாளர். அவர் வடித்துக் கொடுத்த எண்ணங்கள் இன்றும் உயிருடன் உலவிக் கொண்டுள்ளது.
“நானொரு உருவமற்ற குரல். நான் உடலால் மடிந்தாலும், உணர்வுகளால் ஓவ்வொரு இந்தியனையும் விழிப்படையச் செய்வேன்; அதுவரை ஓயமாட்டேன்” என சத்தியம் செய்துள்ளார். “செயல் வடிவே எனது தாரக மந்திரம். வலிமையான, துடிப்பு மிக்க, நம்பிக்கையுடைய, நேர்மைக்கு முதுகெலும்பாகத் திகழும் இளைஞர்களே வாருங்கள். புதிய பாரதத்தை புலரச் செய்வோம் என்று முழங்கியவர் இன்று நம்முள் உட்கலந்து வாழ்கின்றார். அவரை வணங்கி அவர் வழிநடப்போம் ! வாருங்கள்.
--சுவாமி சிவயோகா
நந்தாசின்மயா மிஷன்,
மதுரை
94431 94012
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE