மொடக்குறிச்சி: கோவில் முறைகேடு தொடர்பாக, 11 பேர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் தர, கொடுமுடி கோவில் செயல் அலுவலர், அழைப்பாணை விடுத்துள்ளார்.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலராக பணிபுரிந்த முத்துசாமி மீது, ஊழல் புகார் எழுந்தது. விசாரணையில், மூன்று கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதை, தணிக்கை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் முத்துசாமி, கடந்தாண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் முத்துசாமி பணியில் இருந்தபோது, 2019ல் கொடுமுடி புது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கொடுமுடியை சேர்ந்த பா.ஜ., மற்றும் காங்., கட்சியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கமிட்டி, மக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது. மேலும் கட்டளைதாரர் பெயரில், ஆண்டு தோறும் ஆறு லட்சம் வீதம், ?? ஆண்டுகளில், 60 லட்சம் ரூபாய் மக்களிடம் வசூலித்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, உண்மை கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, முதலமைச்சர் தனிப்பிரிவு, ஈரோடு கலெக்டர் கதிரவன், ஈரோடு, கோவை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, கொடுமுடி மக்கள், பா.ஜ.,வினர் உள்ளிட்ட பலர், கடந்த டிச., மாதம் புகார் மனு அனுப்பினர். இதையடுத்து புகாருக்கு ஆளான கொடுமுடி, நத்தமேடு, ஸ்ரீவாரி கதிர்வேல், வடக்கு வீதி சரவணன், ரமேஷ்பாபு, குமர வடிவேல், பெருமாள், சேகர், வேணுகோபால், கோவில் வீதி பாஸ்கரன், பாக்கியம், எம்.ஜி.ஆர்., நகர் முகேஷ், மேற்கு அக்ரஹாரம் ஹரீஷ் என, 11 பேருக்கு, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், விசாரணை அழைப்பாணை அனுப்பியுள்ளார். அதில், இன்று காலை, 10:30 மணிக்கு, புது மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடக்கும் விசாரணைக்கு, ஆஜராகுமாறு தெரிவித்துள்ளார். இதேபோல் புகார்தாரர்களும், முறைகேடு புகாருக்கு ஆதாரம் இருந்தால், மேல் நடவடிக்கை எடுக்க, அவற்றை சமர்ப்பிக்கலாம் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE