ஈரோடு: நிலத்தை சமன் செய்யவே இரண்டு ஆண்டாக போராடி வரும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் வீடு கட்டும் கனவு நனவாகுமா? என்று, எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 82 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2018 டிச.,21ல் சித்தோடு நல்லகவுண்டன்பாளையத்தில், இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. நிலம் பாறை, கரடு, முரடாக இருப்பதால், சமன் செய்து தரக்கோரி கடந்த, நவ., மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஆர்.டி.ஓ., சைபுதீன், சமன் செய்து தருவதாக கூறி, ஒரு நாள் மட்டும் இயந்திர உதவியுடன் பாறைகளை உருட்டி தள்ளினர். அதன் பிறகு பணி நடக்கவில்லை. இந்நிலையில் நிலத்தை சமன் செய்து தரக்கோரி, மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். டவுன் போலீசார், தாசில்தார் பரிமளா தேவி பேச்சுவார்த்தை நடத்தினர். வீடு கட்ட ஏதுவாக, நிலத்தை சமன் செய்து கொடுக்கும் வரை, கைவிட மாட்டோம் எனக்கூறி, போராட்டத்தை தொடர்கின்றனர்.
ரூ.15 லட்சம் தேவை: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட, 2.1 ஏக்கர் நிலம் முழுவதும் பாறையாக உள்ளது. இதை சமன் செய்ய, 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனத்தெரிகிறது. மாற்றுத்திறனாளிகளால் அவ்வளவு தொகை செலவு செய்ய இயலாத நிலையில், ஸ்பான்ஸர் பிடித்து சமன் செய்து தருகிறோம் என வருவாய் துறை கூறியது. யாரும் கிடைக்காததால் தாமதம் நீடிக்கிறது. நேற்றைய போராட்டத்தை கலைக்க வந்த டவுன் டி.எஸ்.பி., ராஜூ ''நீங்களே ஸ்பான்சர் பிடித்துக் கொள்ள வேண்டியது தானே?'' என்று மாற்றுத்திறனாளிகளிடம் காட்டமாக கூறினார். மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிடாததால், சிறப்பு நிதி ஒதுக்க முடியுமா? என வருவாய் துறை அதிகாரிகள், யோசித்து வருவதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE