சென்னை: ஜன.,14ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க காங்., எம்பி ராகுல் வரவுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க 14-ம் தேதி காங்., எம்.பி., ராகுல், தமிழகம் வருகிறார். அத்துடன் சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்., நிர்வாகிகளுடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல் தமிழகம் வருகையை, தமிழக காங்., தலைவர் அழகிரி உறுதி செய்துள்ளார். காலை 11 :00 மணியளவில் ராகுல் தமிழகம் வருவார் என தெரிவித்தார்.

மேலும், அதே ஜன.,14ம் தேதி பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வரவுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்க உள்ளதால் அரசியல் தலைவர்களின் பார்வை தமிழகம் நோக்கி நகர்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஜன.,16ல் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுல் வரும் 23ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக மீண்டும் தமிழகம் வரவுள்ளதாகவும், அவர் 23 முதல் 26ம் தேதி வரை ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE