சேலம்: ''காக்கி சீருடை அணிவதால், ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் நடந்து, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்,'' என, எஸ்.பி., தீபா கானிகேர் பேசினார்.
சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, 52 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, 40 நாட்கள் சிறப்பு பயிற்சி, சேலம் வின்சென்டில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வழங்கப்பட்டது. இறுதி நாளான நேற்று, ஊர்க்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்ற, எஸ்.பி., தீபா கானிகேர், பின்னர் பேசியதாவது: ஊர்க்காவல் படையினர், போலீசாருக்கு உறு துணையாக இணைந்து பணியாற்ற வேண்டும். ஒதுக்கப்படும் பணியை, பொறுப்புணர்வோடு செய்திட வேண்டும். காக்கி சீருடை அணியும் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடுடனும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் பெரியசாமி, ஆயுதப்படை டி.எஸ்.பி., சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கமிஷனர் செந்தில்குமார், பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், ''எந்தவித புகாருக்கும் உள்ளாகாமல், சமூகத்தை காக்க கடமையாற்ற வேண்டும்,'' என்றார். துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன், ஏரியா கமாண்டர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE