கிருஷ்ணகிரி: மருதேரி அருகே, 10.90 கோடி ரூபாய் செலவில், படுகை அணை கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, அகரம், மருதேரி, பண்ணந்தூர், வாடாமங்கலம் ஆகிய முக்கிய பஞ்சாயத்துகள், தென்பெண்ணை ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்றன. இந்த தண்ணீரை தடுத்து, அகரம் - மருதேரி பாலத்தின் அருகில், தென்பெண்ணை ஆற்றில் குறுக்கில் சிறிய அணை கட்ட வேண்டும் என, கடந்த, 30 ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, படுகை அணை கட்ட, 10.90 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ராஜ்யசபா எம்.பி., முனுசாமி, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆகியோர், படுகை அணை கட்டும் பணியை துவக்கி வைத்தனர். இந்த அணை, 143.60 மீ., நீளத்துக்கு, 1.40 மீ., உயரத்துக்கு, 1.3 மில்லியன் கன அடி நீர் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், 1,155 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இந்த அணையை சுற்றியுள்ள, நான்கு கூட்டு குடிநீர் திட்ட, ஐந்து கிணறுகள் மூலம், குடிமேனஹள்ளி, பண்ணந்தூர், அகரம், மருதேரியை சேர்ந்த, 25 ஆயிரம் மக்கள் நிரந்தர குடிநீர் வசதி பெற உள்ளனர். இதனால், இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை மற்றும் விவசாய நீர் தேவைகள் பூர்த்தியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் எம்.பி., அசோக்குமார், ஒன்றிய குழுத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE