மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அடுத்த, மதியம்பட்டி ஏரி மற்றும் பூலாங்குட்டை ஏரியில், மீன் டெண்டர் விடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி, கண்ணனூர் மாரியம்மன் ஏரி நீர் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் பூலாங்குட்டை நீர் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மதியம்பட்டி ஏரி மற்றும் பூலாங்குட்டை ஏரி, 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுற்றியுள்ள, 500 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக, ஊர்மக்கள் ஒன்று கூடி மீன் ஏலம் எடுத்து, அதில் வரும் தொகையை வைத்து, ஏரி நீர்வரத்து வாய்க்காலை பராமரித்து வந்தோம். சில வருடங்களாக, அரசியல் செல்வாக்கு காரணமாக டெண்டர் எடுத்த சிலர், மீன்களுக்கு உணவாக கோழி இறைச்சி கழிவு, இறந்த விலங்குகளை கொட்டுகின்றனர். இதனால், மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் மாசு ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏரியில் மீன் பிடிப்பது சம்பந்தமாக, வரும், 20ல், ஏலம் நடக்கவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஏரியில் மொத்த ஹெக்டேர் பரப்பளவு, 16.55 என்பதற்கு பதிலாக, எட்டு ஹெக்டேர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, ஏல நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE