நாமக்கல்: சமயபுரம் பாத யாத்திரை சென்ற யாத்ரீகர், நாமக்கல்லில் தூங்கும்போது, பாம்பு கடித்து உயிரிழந்தார். திருச்செங்கோடு அடுத்த சாலப்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி நந்தகுமார், 28. மனைவி வசந்தி, மூன்று வயதில் மகன் உள்ளனர். அவர், தன் நண்பர்கள், உறவினர்களுடன், ஆண்டுதோறும், திருச்சி மாவட்டம், சமயபுரத்துக்கு, பாதயாத்திரை சென்று வந்தார். நேற்று முன்தினம், 17ம் ஆண்டாக, 15 பேர், மாலை, 6:00 மணிக்கு, திருச்செங்கோட்டில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, ஆறு பேர் நடந்து சென்று விட்டனர். நந்தக்குமார் உள்ளிட்ட, ஒன்பது பேர், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் படுத்தனர். அரை மணி நேரத்தில், நந்தக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் படுத்திருந்த யாத்ரீகர்கள் அதிர்ச்சியடைந்து எழுந்து பார்த்தனர். பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு திடுக்கிட்டனர். இதற்கிடையில், வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தக்குமாரை, அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தி ஏற்றிக் கொண்டு, தனியார் மருத்துவமனை சென்றனர். அங்கிருந்து, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE