கரூர்: சேவல் சண்டைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி அருகில், பூலாம் வலசில், நாளை முதல், 15 வரை, மூன்று நாட்களுக்கு சேவல் கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, வாய்மொழியாக அனுமதி வழங்கி இருப்பதாக வந்துள்ள தகவல், சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அரசு அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 2014ல் கத்தி சேவல் சண்டையில், இருவர் பலியானதை தொடர்ந்து, அதற்கு தடை விதிக்கப்பட்டது. 2019ல் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்கப்பட்டு, போட்டி நடந்து வருகிறது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, கத்தி கட்டி சேவல் சண்டை நடந்து வருகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில், நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து தப்பித்து கொள்ளவே, மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமான அனுமதி வழங்கவில்லை. வாய்மொழியாக, 'நடத்தி கொள்ளுங்கள்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி நடத்தும் கமிட்டியிடம், வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட கொரோனா வழிகாட்டி நடைமுறையில், அரசு அதிகாரிகள் கையெழுத்து இல்லை. ஆகையால், போட்டி நடக்கும் இடத்தில், கால்நடை, சுகாதார துறையினர், எந்த முகாம்களையும் அமைக்க திட்டமிடவில்லை. சேவல் கட்டுக்கு வழங்கப்படும் அனுமதி விவகாரத்தில், தன்னை பாதுகாத்து கொள்வதில் கவனமாக இருக்கும் மாவட்ட நிர்வாகம், கொரோனா காலத்தில் தினசரி, 10 ஆயிரம் பேர் கூடும், சேவல் கட்டு போட்டி நடத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிந்திக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியாவிடம் கேட்டபோது, ''அதுபற்றி கலெக்டர் அலுவலக மேலாளரிடம் கேளுங்கள்,'' என்றார். கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) கலியமூர்த்தி கூறுகையில், ''இந்த சேவல் கட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை. நடத்தி கொள்ளுங்கள் என்று, வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE