கடலுார் : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக் கூறி 76.10 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ராமநத்தத்தைச் சேர்ந்தவர் முகமது ஹனீபா, 35; இவர், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி மனு அளித்திருந்தார். அதில் மாற்றுத் திறனாளியான நான், ராமநத்தத்தில் கம்ப்யூட்டர் மையம் நடத்தினேன்.இங்கு 2018 நவம்பர் 9ல் பெரம்பலுார் மாவட்டம், மணபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல், 54; அவரது மகன் கல்யாண்குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறினர்.அதனை நம்பி 2018 டிசம்பர் 20 முதல் பல தவணைகளாக கல்யாண்குமாரிடம் நேரிலும், வங்கிக் கணக்கிலும் என 85 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.லாப தொகையாக 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தனர். அதன் பிறகு லாபம் தராமல் ஏமாற்றியவர்கள், மீதமுள்ள 76 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தராமல் தலைமறைவாகினர்.இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கனகேசன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் லுாயிஸ்ராஜ் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், தலைமைக் காவலர் கல்பனா ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.அதன்பேரில், அரியலுாரில் பதுங்கியிருந்த கதிர்வேலை நேற்று கைது செய்தனர். கல்யாண்குமாரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE