திருப்பாவை - பாடல் 29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
பொருள்: கண்ணா! உன் பொற்றாமரைப் பாதங்களை வணங்க வந்ததன் காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்க்கும் ஆயர் குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இதுதவிர மற்ற விருப்பங்களையெல்லாம் நீயே அழித்து விடு.
திருப்பள்ளியெழுச்சி - பாடல் 9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்கண்ணகத்தே நின்று களிதரு தேனே! கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: விண்ணுலகில் உள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே! உன்னை வணங்கும் அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.
திருப்பாவை - பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
பொருள்: பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட பெண்கள் சிரமப்பட்டு தரிசித்தனர். அவர்கள் பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிபுத்துாரில் பிறந்த, தாமரை முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களும், அழகிய திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
திருப்பள்ளியெழுச்சி - பாடல் 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்போக்குகின்றோம் அவமே இந்தப் பூமிசிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கிதிருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப் படுகிறார்கள். ஆனால்,நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித் தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE