காங்கிரஸ் அழியக் கூடாது!
சொ.முத்துகுமரன், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரசை, வாழ்ந்து கெட்ட கட்சி என்று சொல்லலாம். ஒரு காலத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலமே இல்லை. 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என கோஷமிட்ட காலமும் ஒன்று உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், திராவிட அரசியலால், எதிர்க்கட்சியாக மாறியது. எம்.ஜி.ஆர்., ஆட்சியின் போது,
காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக பின்தள்ளப்பட்டது.அதை தொடர்ந்து, அ.தி.மு.க., - தி.மு.க., என, ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்தே, அக்கட்சி காணமல் போய் விட்டது. இன்றைய நிலையில், தனித்துப் போட்டியிட்டால், பெரும்பாலான தொகுதிகளில், 'டிபாசிட்' கூட, அக்கட்சி பெற முடியாது.தமிழகத்தில் மட்டும் அல்ல, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பரிதாப நிலையில் தான் உள்ளது. வடமாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது கூட, தென்மாநிலங்களில் அக்கட்சி அபார வெற்றி பெற்றது. இன்று, பல மாநிலங்களில் காங்கிரசின் நிலை பரிதாபமாக உள்ளது.மாநில கட்சிகள், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பிய காலம் உண்டு. இன்று, மாநில கட்சியிடம் கூட்டணிக்காக கெஞ்சும் நிலையில் காங்கிரஸ் உள்ளது.காங்கிரசின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உண்டு. காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த ஊழல்கள், பிரதமரையே அடிமை போல நடத்தியது, கூட்டணி கட்சிகளுக்கு பயந்து, பதவிகளை வாரி வழங்கியது போன்றவை, மக்களிடையே பெரும் அதிருப்தியை
ஏற்படுத்தின.மேலும் வாரிசு அரசியல், மத சார்பற்றக் கட்சி என்ற போர்வையில் போலித்தனம் போன்றவையும், காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம்.காங்கிரஸ், சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம், இது. மேலே கூறிய குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் சரி செய்ய வேண்டும்.நேரு குடும்பம் தான், காங்கிரஸ் என்ற மனநிலையில் இருந்து, அக்கட்சி மாற வேண்டும். இந்தியர் யார் வேண்டுமானாலும், காங்கிரஸ் தலைவராகலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
நாட்டின் நலனுக்கு, காங்கிரஸ் அவசியம். எவ்வளவு குறைகள் இருந்தாலும், பா.ஜ.,வுக்கு மாற்றாக தேசிய அளவில் இருப்பது, காங்கிரஸ் தான். அக்கட்சி தோல்வி அடையலாம்; ஆனால், அழிந்து விடக் கூடாது.
மர்மம் என்னவோ?
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புகை பிடிப்பதற்கான வயதை, 18 வயதில் இருந்து, 21 ஆக அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் புகைப்பிடிப்போருக்கு விதிக்கப்படும், 200 ரூபாய் அபராத தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தவும் முடிவெடுத்துள்ளது.இந்த உத்தரவு, வெறும் ஏட்டுச் சுரைக்காயாகி விடக் கூடாது.புகைப் பிடிக்கும் பழக்கத்தால், நம் நாட்டில் ஆண்டிற்கு, 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகை பிடிப்போரை விட, அவரின் அருகில் இருப்போருக்கு தான் ஆபத்து அதிகம்.மத்திய அரசின் இந்த சட்டம், எப்போது அமலாகும்... யார் செயல்படுத்துவது?புகையிலை பொருள் விற்பனைக்கு தடை இருந்தும் கூட, அனைத்து இடங்களிலும் அவை தாராளமாக கிடைக்கின்றன.இன்று, பள்ளி மாணவர் கூட மது, புகையிலை, சிகரெட் பழக்கங்களுக்கு ஆளாகி உள்ளனர். இது, இந்நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்.அது சரி... புகையிலை பொருட்களை விற்போருக்கும், புகைப்பிடிப்போருக்கும் தண்டனை உண்டு. அதை தயாரிப்போருக்கு எந்த தண்டனையும், தடையும் விதிக்கப்படாததன் மர்மம் என்னவோ தெரியவில்லை?
இது தான் உண்மையான சமூக நீதி!
என்.மனோகரன், காரமடை, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மேயராக, 21 வயதேயான, கல்லுாரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் பதவி ஏற்றுள்ளார். இடது ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த இவருக்கு, நாட்டில், மிக இளம் வயதில் மேயரானவர் என்ற பெருமை கிடைத்துள்ளது.அவருக்கு ஊடகங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்.பந்தளம் நகராட்சியில், மொத்தம் உள்ள, 33 வார்டுகளில், 18 இடங்களை கைப்பற்றி, பா.ஜ., வெற்றி பெற்றது.அதில், பட்டியல் சமூக பெண்மணி சுசீலா சந்தோஷ், பா.ஜ., சார்பில் களம் இறங்கி, அமோக வெற்றி பெற்றார். மேலும், பந்தளம் நகராட்சி தலைவராக சுசீலாவை, பா.ஜ., தேர்வு செய்துள்ளது.ஆர்யா ராஜேந்திரனை விட, நாம் அதிகம் பாராட்ட வேண்டியது சுசீலா சந்தோஷைத் தான். கம்யூ., கட்சி, மேயர் வேட்பாளருக்கு ஆட்கள் கிடைக்காததால் தான், ஆர்யாவை தேர்ந்தெடுத்தது. பா.ஜ., அப்படி அல்ல. பட்டியல் இன பெண் சுசீலாவிற்கு, ஆட்சியில் முன்னுரிமை அளித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில், சாதனை பெரிதல்ல; அதை யார் செய்கிறார் என்பது தான் முக்கியம்.சமூகநீதி பேசும், தமிழன போர்வையாளர்கள் யாரும், சுசீலாவை பாராட்டவில்லை. அவர்கள் பேசுவது, சமூக நீதி அல்ல என்பது, இதிலிருந்தே தெரிகிறது.பா.ஜ.,வை மதவாத, உயர் ஜாதி, ஹிந்துத்துவா சிந்தனையுடைய கட்சி என, இங்குள்ள திராவிட கட்சியினர் விமர்சிக்கின்றனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை, தமிழக தலைவராக, பா.ஜ., நியமித்துள்ளது.திராவிடம், சமூக நீதி பேசும் தி.மு.க.,வில், அப்படி யாராவது தலைவர் பதவியில் அமர்ந்திருக்கின்றனரா?பா.ஜ., மீதுள்ள வெறுப்பால், கேரளாவில் நிகழ்ந்த ஒரு சாதனையை, இங்குள்ள ஊடகங்களும், அரசியல்வாதிகளும் மறைக்க முயற்சிக்கின்றனர்.சுசீலா, பொது வார்டில் நின்று, வெற்றி பெற்றுள்ளார். பந்தளம் நகராட்சி தலைவர் பதவியும், மகளிருக்கு என, ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.ஆனாலும் பா.ஜ., ஒரு பெண்ணை, அதுவும் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை, பொது வார்டில் நிற்க வைத்து, பெண்களுக்கான தனி ஒதுக்கீடு இல்லாத நிலையிலும், நகரசபைத் தலைவராக ஆக்கியுள்ளது. துணை தலைவராக ரம்யாவை நியமித்துள்ளது.இதுவல்லவோ சமூகநீதி; தாழ்த்தப்பட்டோருக்கான நிஜமான அங்கீகாரம்; பெண்களுக்கான நியாயமான அதிகாரம்; இதுவல்லவோ உண்மையான சாதனை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE