புதுடில்லி : ''ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய எதிரியாக விளக்கும் வாரிசு அரசியல், ஒரு புது வடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமெனில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பார்லிமென்டின் மைய மண்டபத்தில் நேற்று நடந்த, தேசிய இளைஞர் பார்லிமென்ட் திருவிழாவின் இரண்டாம் ஆண்டு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது:குடும்பப் பெயரை பயன்படுத்தி, தேர்தலில் வெற்றி பெறும் நடைமுறை, கணிசமாக குறைய துவங்கி உள்ளது. அதே நேரம், வாரிசு அரசியல் முழுதுமாக ஒழியவில்லை.நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு, இந்த வாரிசு அரசியல் மிகப் பெரிய காரணமாக உள்ளது.
தங்கள் குடும்பத்தை சேர்ந்த முந்தைய தலைமுறையினர், தாங்கள் செய்த ஊழல்களுக்கு தண்டிக்கப்படாதது, புதிய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தைரியத்தை அளிக்கிறது.சொந்த குடும்பத்திலேயே பல உதாரணங்கள் இருப்பதால், அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை. நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்துடன் உள்ளனர். தங்கள் குடும்பத்தையும், குடும்ப அரசியலையும் மட்டுமே பாதுகாக்க நினைக்கும் சுயநல அரசியல் தலைவர்கள் இன்றைக்கும் உள்ளனர்.
இவர்களால், நாட்டின் ஜனநாயகம் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. அதன் திறமையின்மை, நாட்டுக்கு பெரும் சுமையாகிறது.நேர்மையானவர்களுக்கு, மக்கள் ஆட்சியில் இடம் அளிக்க துவங்கி விட்டனர். எனவே, நாட்டின் நலனுக்காக, இளைஞர்கள் அரசியலில் ஈடுபட துவங்க வேண்டும்.மற்ற துறைகளைகளில் உள்ளதை போல, இளைஞர்களின் புதிய சிந்தனை, கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை, அரசியலுக்கும் தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE