புதுடில்லி:''எல்லையில், இந்தியா -- சீனா படைகளுக்கு இடையிலான மோதல், விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது; அதே நேரம், எந்த மாதிரியான சவாலான சூழ்நிலைகளையும் திறம்பட கையாளகூடிய தயார் நிலையில், நம் வீரர்கள் உள்ளனர்,'' என, ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம்.எம்.நரவானே தெரிவித்துள்ளார்.
மோதல்
கிழக்கு லடாக் பகுதி யில் உள்ள, இந்திய -- சீன எல்லையில், இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே, கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, மோதல் போக்கு நிலவி வருகிறது.கடும் பனியிலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை, இரு தரப்பினரும் எல்லையில் குவித்து உள்ளனர். அதே நேரம், எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே, எட்டு சுற்றுகள் பேச்சு நடந்தது. ஆனால், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்ய, ராணுவ தலைமை தளபதி, எம்.எம்.நரவானே நேற்று சென்றார்; அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:வடக்கு எல்லையில் உள்ள படைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என தோன்றியது. எனவே, அந்த பணிகளை மேற்கொள்ளவே, தற்போது கிழக்கு லடாக் பகுதிக்கு வந்துள்ளேன்.
இந்தியா மற்றும் சீன படையினர், தங்கள் பரஸ்பர பாதுகாப்பின் அடிப்படையில், படைகளை திரும்ப பெற்று, எல்லையில் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவர் என்ற நம்பிக்கை உள்ளது.தயார் நிலைஅதே நேரம், எல்லையில் எந்த மாதிரியான சவாலான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள, நம் வீரர்கள் உச்சபட்ச தயார் நிலையில் உள்ளனர். லடாக் மட்டுமல்லாமல், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி முழுவதும், அதிகபட்ச விழிப்புடன் செயல்படுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE