காந்திநகர்:பெற்றோர் குறுக்கீடு இன்றி, கணவன் -- மனைவியை போல் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், குஜராதை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவன் -- மாணவி, வீட்டைவிட்டு ஓடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராதின் வதோதராவில் உள்ள, சஹானி என்ற இடத்தை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் -- மாணவியை, கடந்த மாதம், 28 முதல் காணவில்லை என, அவர்களது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 13 நாட்களுக்கு பின், குஜராதின் வாபி பகுதியில் சுற்றித் திரிந்த இருவரையும், போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி மாணவன் -- மாணவி கூறிய தகவல், போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இது குறித்து போலீசார் வெளியிட்ட விபரம்:இந்த மாணவனும், மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் தவித்துள்ளனர்.
பெற்றோர் குறுக்கீடு இன்றி, கணவன் -- மனைவியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்று இருவரும் ஆசைப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறியதாக, விசாரணையில் தெரிவித்தனர். கடந்த, 28ம் தேதி, வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும், ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றுள்ளனர். ரயிலை தவறவிட்டதால், வாடகை கார் வாயிலாக, வாபி சென்றுள்ளனர். அவர்கள் இருவரும், வீட்டில் இருந்து, 30 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வந்துஉள்ளனர். இவ்வாறு, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE