தமிழ்நாடு

மாறுமா? செஞ்சி கோட்டை வேலூர் வாயில் பிரதான வழியாக...இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை தேவை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி கோட்டையில் எழில் மிகுந்த வேலுார் கேட் பகுதியை பிரதான நுழைவு வாயிலாக மாற்ற இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் இந்தியாவில் முழு அமைப்புடன் உள்ள கோட்டைகளில் செஞ்சிக்கோட்டை முக்கியமானது. தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டை. தமிழர்களின் போர் திறன், கட்டடக்கலை, மதி நுட்பம், வீரம் ஆகியவற்றை பறைச்சாற்றும் கோட்டையாக
 மாறுமா?  செஞ்சி கோட்டை வேலூர் வாயில் பிரதான வழியாக...இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை தேவை

செஞ்சி : செஞ்சி கோட்டையில் எழில் மிகுந்த வேலுார் கேட் பகுதியை பிரதான நுழைவு வாயிலாக மாற்ற இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் இந்தியாவில் முழு அமைப்புடன் உள்ள கோட்டைகளில் செஞ்சிக்கோட்டை முக்கியமானது. தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டை. தமிழர்களின் போர் திறன், கட்டடக்கலை, மதி நுட்பம், வீரம் ஆகியவற்றை பறைச்சாற்றும் கோட்டையாக உள்ளது. செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது கனிசமாக உயர்ந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையினரும் கோட்டையில் பல இடங்களில் பூங்கா அமைத்து, குடிநீர், கழிப்பிட வசதி செய்துள்ளனர்.

தற்போது பொருட்கள் பாதுகாப்பு அறை, கேண்டீன் கட்டுமான வேலை நடந்து வருகிறது. 12 கி.மீ., துார மதில் சுவர்களை கொண்டு மூன்று மலைகளையும், இரண்டு சிறிய குன்றுகளையும் இணைத்து முக்கோண வடிவில் செஞ்சி கோட்டையை கட்டி உள்ளனர்.கோட்டைக்கு புதுச்சேரி வாயில், திருச்சிராப்பள்ளி வாயில், வேலுார் வாயில் என மூன்று வாயில்களை அமைத்து உள்ளனர். திருச்சிராப்பள்ளி வாயில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பின்புறம் காட்டுப் பகுதியில், எளிதில் செல்ல முடியாத இடத்தில் உள்ளது. புதுச்சேரி வாயில் பீரங்கிமேடு பகுதி மக்கள் விழாக் காலத்தில் பயன்படுத்தி வருகின்றனர். வேலுார் வாயில் செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செல்லியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ளது.

இந்த வழி மூடி வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி வாயிலில் சிறைச்சாலை, காவலர்கள் தங்கும் அறைகள், கண்காணிப்பு மதில்கள் அமைத்துள்ளனர். இதை சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். வேலுார் வாயில் அகலமான, ஆழமான அகழியும், அகழியின் மீது பாலமும், அருகே காவலர் கூண்டும் உள்ளது. மிக உயரமான மதில் சுவரும், எதிரிகள் தாக்க முடியாத வகையில் வளைவான பாதையும் அமைத்துள்ளனர்.

மதில் சுவரின் மீது மாடமும், உள்ளே செல்ல பெரிய நுழைவு வாயிலும், உள் பகுதியில் இரண்டு அடுக்கு கல் மண்டபம், என பிரம்மாண்டமான நுழைவு வாயில் நம்மை பழங்காலத்திற்கே அழைத்து செல்லும் அமைப்போடு காணப்படுகிறது. செஞ்சி கோட்டைக்கு பெருமை சேர்க்கும் இந்த பகுதியை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லாமல் மூடி வைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள், இந்திய தொல்லியல் துறை அலுவலகம் வழியாக கோட்டையின் இரண்டாம் சுற்று மதில் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு ராஜகிரி கோட்டைக்குள் செல்லும் வழியில் டிக்கெட் கவுன்ட்டர் அமைத்து அந்த வழியாக சென்று வருகின்றனர்.

இதனால் கோட்டையின் முதல் சுற்று பாதுகாப்பு அரண்களை பற்றி சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது.கோட்டையின் நுழைவு பகுதியே வேலுார் கேட் வழியாக இருக்கும் நிலையில், இந்த வழியை அடைத்து வைத்திருப்பது கோட்டையின் அமைப்பை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத வகையில் உள்ளது. மிக விரைவில் டிக்கெட் கவுன்ட்டரை புதிய கட்டடத்திற்கு மாற்ற உள்ளனர். அப்போது வேலுார் கேட் வழியாக சுற்றுலா பயணிகள் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

வேலுார் கேட் எதிரே சுற்றுலா வாகனங்களை நிறுத்த பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது.இதன் வழியாக ராஜகிரி கோட்டைக்கு செல்ல வேலுார் கேட்டில் இருந்து செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும். இந்த வழியை பயன்படுத்தினால் சுற்றுலா பயணிகள் வேலுார் கேட்டின் பிரம்மாண்டத்தை அறிய முடியும். சுற்றுலா வருபவர்களுக்கு முழு திருப்தியளிக்கும் வகையில் பயணம் அமையும்.எனவே வேலுார் கேட் பகுதியை கோட்டைக்குள் வருவதற்கான நுழைவு பகுதியாக மாற்ற இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X