'கூட்டணி கட்சிகளுக்கு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கக் கூடாது' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேசியதால், தி.மு.க., கூட்டணியில் சர்ச்சை வெடித்துள்ளது. அவருக்கு வாய்ப்பூட்டு போடும்படி, போர்க்கொடி துாக்கியுள்ள, கூட்டணி கட்சி தலைவர்கள், இது தொடர்பாக, தி.மு.க., மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், உதயநிதி பிரசாரம், பொது மக்களிடம் வரவேற்பு பெற்றிருந்தது. ஆனால், சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி சொதப்பி வருகிறார்; அநாகரிகமாக பேசுகிறார் என்ற அதிருப்தி, அவர் மீது உருவாகி உள்ளது.
கடும் எதிர்ப்பு
உதயநிதியை சுற்றியுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள், 'ஜால்ரா' அடிப்பவர்களாக உள்ளனர். 'உதயநிதி பேச்சு நன்றாக இருக்கிறது' என பொய் சொல்லி, அவர்கள் சிரிக்கிறதை நிஜமான சிரிப்பு என கருதி, உதயநிதி பேசும் பேச்சு அபத்தமாகவே இருக்கிறது என்ற விமர்சனம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உதாரணமாக, சசிகலா குறித்து உதயநிதி பேசிய பேச்சுக்கு, பா.ஜ., பெண் நிர்வாகிகள் மற்றும் அ.ம.மு.க., கட்சி நிர்வாகிகள் மத்தியில், கடும் எதிர்ப்பு எழுந்தது. உதயநிதி வீட்டை முற்றுகையிட, அ.ம.மு.க., மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டனர். உதயநிதி மீது வழக்கு தொடரவும் ஆலோசித்தனர்.
இதையடுத்து, உதயநிதி வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள், அடுத்த விவகாரமாக, கூட்டணி கட்சிகளை உதாசீனப்படுத்திய விவகாரம், தி.மு.க.,வில் பூதாகரமாக வெடித்துள்ளது.
அதாவது, உதயநிதி பேசுகையில், 'வரும் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். 'எனவே, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என, ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறேன்' என, கூறியுள்ளார்.
அதிருப்தி
உதயநிதியின் பேச்சு, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:வெண்ணெய் திரளும் நேரத்தில் தாளியை உடைத்த மாதிரி, உதயநிதியின் பேச்சு இருக்கிறது. தனித்து போட்டியிட்டு, 234தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றால், கூட்டணி தேவையில்லை என அறிவிக்க, தி.மு.க.,வுக்கு துணிச்சல் இருக்கிறதா; தெம்பும், திராணியும் இருக்கிறதா?அதிகார தோரணைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. பழம் மட்டும் உங்களுக்கு; தோல் மட்டும் எங்களுக்கா? அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசும், இதுபோன்ற பேச்சுக்கள், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நல்லுறவை பாழ்படுத்தி விடும்.
எனவே, உதயநிதிக்கு, கட்சி மேலிடம் வாய்ப்பூட்டு போட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தி.மு.க., மூத்த தலைவர்களிடமும், உதயநிதி பேச்சு தொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வழக்குப்பதிவு
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜலட்சுமி. அ.தி.மு.க., வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் குறித்து, அவதுாறாக பேசி வருகிறார்.
சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி, 'முதல்வர் பழனிசாமி., - சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார். விட்டால் அவரது சேலைக்குள் புகுந்திருப்பார்' என, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில், ஆபாசமாக பேசியுள்ளார். இதற்கான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெண்களை மிக கேவலமாக சித்தரிப்பதுடன், முதல்வர் பழனிசாமி., நற்புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள, உதயநிதி மீது, கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, உதயநிதி மீது இரு பிரிவினருக்கும் இடையே, மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தல், பெண்கள் பற்றி ஆபாசமாக பேசுதல் உட்பட, நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ், நேற்று வழக்கு பதிந்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE