அம்மா பசிக்குதே

Added : ஜன 12, 2021
Share
Advertisement
மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துரை கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரி என்ற சுதந்திர போராட்ட வீரர் தனக்கு விதிக்கப்பட்ட பத்தாண்டு சிறை தண்டனை முடிந்து நோயினாலும், சிறையில் அனுபவித்த வேதனையாலும் உடல் நலிந்து புதுச்சேரியில் தங்கியிருந்த பாரதியாரை சந்திக்க சென்றார்.பாரதியாரும் அவரை அடையாளம் காண முடியாமல்
 அம்மா பசிக்குதே

மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துரை கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரி என்ற சுதந்திர போராட்ட வீரர் தனக்கு விதிக்கப்பட்ட பத்தாண்டு சிறை தண்டனை முடிந்து நோயினாலும், சிறையில் அனுபவித்த வேதனையாலும் உடல் நலிந்து புதுச்சேரியில் தங்கியிருந்த பாரதியாரை சந்திக்க சென்றார்.

பாரதியாரும் அவரை அடையாளம் காண முடியாமல் யார் என்று கேட்க, நான் தான் நீலகண்ட பிரம்மச்சாரி என்ற நாதழுதழுக்க கூறினார். அவரை கண்ணீரால் கட்டி ஆரத்தழுவினார் பாரதியார். சிறிது நேரம் கழித்து 'நான் நான்கு நாட்களாக சாப்பிடவில்லை, உணவு அளிப்பாயா பாரதி' என்றார். அவருக்கு உணவு தர முடியாத தன் வீட்டு சூழ்நிலை அறிந்து மனம் குமுறி பாரதியார் பாடிய பாடல் தான் 'இனியொரு விதிசெய்வோம்- அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடு வோம்'


பசிக்கொடுமை1930களில் பாரதியார் இந்த பாடலை பாடி இன்று 90 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் நம் நாட்டின் பசி கொடுமை இன்றும் மாறவில்லை. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு உணவு உற்பத்தி துறையில் பல தொழில் நுட்ப வளர்ச்சிகள், பசுமைப் புரட்சி, வெண்மை புரட்சி மற்றும் நீல புரட்சிகளுக்கு பின்பும் பசிக்கொடுமை முற்றிலும் நீங்கவில்லை. உணவு உற்பத்தி துறையை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றினாலும், நம் நாட்டின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தி திறன் பல மடங்கு உயர்ந்திருந்தாலும் தனி மனித பட்டினி சாவுகள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அண்மையில் உலக சுகாதார மையம், உலக வங்கி மற்றும் ஐ.நா., சபை இணைந்து 107 நாடுகளில் நடத்திய 'உலக பட்டினி குறியீடு'பற்றிய சர்வேயில் இந்தியா 94வது இடத்தை வகிக்கிறது. நம் அண்டை நாடான வங்க தேசம் 75வது இடத்திலும், பாகிஸ்தான் 88வது இடத்திலும், இலங்கை 64வது இடத்திலும் உள்ளன. 99ம் இடத்தில் நமக்கு முந்திய நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ளது என்ற செய்தி பல்வேறு வகையில் நம்முடைய வளர்ச்சி பற்றி சிந்திக்க வைக்கிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா பட்டினி இல்லா நாடுகளின் பட்டியலில் 17ம் இடம் பெற்றள்ளது.


அளவு கோல்ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை கணக்கிடுவதற்கான அளவு கோலாக மக்கள் தொகை, உணவு உற்பத்தி, குழந்தைகள் நலம், பெண் குழந்தைகள் வளம், சரிவிகித உணவு போன்ற காரணிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. குழந்தைகள் பிறப்பு விகிதாச்சாரம் அவர்களின் உடல் நலம் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய சரிவிகித உணவு, மகப்பேறில் குழந்தை இறக்கும் சதவிகிதம், பெண் குழந்தைகள் உடல் நலம், பெண் குழந்தைகள் திருமணம், உணவு பாதுகாப்பின்மை, மோசமான சுகாதாரம், அடிப்படை தங்கும் வசதி, உடல் நலப் பாதுகாப்பு குறித்த மருத்துவ வசதிகள் போன்ற விஷயங்களில் இந்தியாவின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த துறைகளில் இந்தியாவும், சூடான் நாடும் ஒரே இடத்தில் இருக்கிறது என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. நம் நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 14 சதவீத மக்கள் தேவையான கலோரி உணவை பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர். குழந்தைகள் இறப்பு விகிதம் 3.7 சதவீதம்.

5 வயதிற்கும் குறைவான 17.3 சதவீத இந்திய குழந்தைகள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். 15 முதல் 19 வயது வரை உள்ள 45 சதவீத பெண் குழந்தைகள் போதிய உடல் வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றனர். 54 சதவீத பெண் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 சதவீத பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே திருமணம் நடந்து விடுகிறது. இதில் 8 சதவீத பெண்கள் 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே தாய்மை அடைந்து விடுகின்றனர்.

இந்த காரணிகள் நாட்டின் ஒட்டு மொத்த மனித வளத்தை பாதிக்கின்றன. நாட்கள் செல்லச் செல்ல இந்த பாதிப்பு இந்தியாவின் உற்பத்தி துறை, தொழில் நுட்பத்துறை என்று வளர்ச்சியை பாதிக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் 5:1 என்ற விகிதத்தில் குழந்தைகள் சரிவிகித உணவு பற்றாக்குறைவினால் கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.ஆகவே, இதுவரை கூறப்பட்ட அனைத்து உடல் நல பிரச்னைகளுக்கு அடிப்படை காரணங்களாக அமைவது சரிவிகித சத்தான உணவு கிடைக்கப்பெறாத சூழ்நிலையே.


வீணாகும் உணவுகள்இன்றைய சமுதாய சுழலில் பல்வேறு வகையில் உணவும், உணவு பொருட்களும் வீணடிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான டன் கோதுமை மற்றும் நெல், உணவு கிடங்குகளில் வீணாகுகின்றன. உணவு பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உணவுகள் வீணடிக்கப்படுகின்றது. ஆடம்பர திருமணங்கள், விசேஷ நாட்களில் அதிகமான உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகின்றது. ஆனால் பசியாலும், பட்டினியாலும் ஒரு பக்கம் மக்கள் கூட்டம் துடித்துக் கொண்டிருக்கிறது.

தனி மனித மாற்றம் தான் சமுதாய மாற்றம் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் நடந்தால் உணவுகள் பாதுகாக்கப்பட்டு தேவை உள்ளவர்களுக்கு கிடைக்கும் நிலை உருவாகும். உணவு கட்டுப்பாடு என்பது தனி மனித ஒழுக்கமாகும். இதை சட்டம் போட்டு கட்டுப்படுத்த முடியாது.ஒவ்வொரு மனிதனும் தனது தேவைக்கேற்ப உணவினை திட்டமிட்டு தயாரித்து உண்ண வேண்டும்.


நோபல் பரிசுபசி கொடுமை தாக்குதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 2020 அமைதிக்கான நோபல் பரிசு ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக உணவு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 2019ல் 88 நாடுகளில் 97 மில்லியன் மக்களின் பசி பிணியை போக்குவதற்கு அரும்பாடுபட்டுள்ளது. 2030க்குள் “பட்டினியில்லா உலகு” என்ற நோக்கினை எட்டும் வகையில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தற்போதைய கொரோனா தாக்குதலினால் சற்று பின்னடைந்துள்ளது. உலகின் 57 நாடுகளில் இந்த இலக்கினை அடைய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

மனிதனை தவிர எந்த மிருகமும், பறவையும், உயிரினமும் உணவை வீணடிப்பதில்லை என்ற உண்மையை நாம் உணர வேண்டும். காட்டில் வாழும் கொடிய மிருகம் கூட தனக்கு தேவையான உணவை மட்டும் வேட்டையாடி உண்கிறது. தனக்கு தேவையான உணவை முறையாக சேமிப்பதில் எறும்புகள் முதலிடம் வகிக்கிறது.ஆறு அறிவு படைத்த மனிதன் தான் உணவினை சீரழிப்பதில் முதலிடம் பெறுகிறான்.

உணவினை வீணடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் வடகொரிய நாடு அவசர சட்டத்தை அறிவித்துள்ளது. தற்போதுள்ள கொரோனா தாக்குதலினால் 2030ல் உலகிலுள்ள 50 சதவீத நாடுகள் கடுமையான பஞ்சத்தை சந்திக்க நேரும் என்று அண்மையில் ஐ.நா சபை எச்சரித்துள்ளது. உணவு என்பது நம் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம். ஒரு துளி உணவை கூட வீணடிக்காத சூழ்நிலை உருவாவதற்கு நாம் நம்முடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.-முனைவர். மு. கண்ணன்,முதல்வர் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை 99427 12261Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X